» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

திங்கள் 7, ஜூலை 2025 9:01:15 AM (IST)



திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடந்தது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 

தமிழ் கடவுளான முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்  கடந்த 2009-ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது. இந்த நிலையில் திருச்செந்தூர் கோவிலை திருப்பதிக்கு இணையாக மாற்றும் வகையில், கடந்த 2022-ம் ஆண்டு ரூ.300 கோடி மதிப்பில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பெருந் திட்டவளாகப் பணிகள் தொடங்கியது. இதில் பல்வேறு திட்டப்பணிகள் முடிவுற்றதைத்தொடர்ந்து கும்பாபிஷேக விழா நடத்து வதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. 

அதன்படி சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி கடந்த 1-ஆம் தேதி முதல் யாக சாலை பூஜைகளுடன் விழா தொடங்கியது. சுவாமி சண்முகருக்கு ராஜகோபுர வாசல் அருகே 8 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பிரமாண்ட யாகசாலை அமைக்கப்பட்டு சுவாமி சண்முகருக்கு 49, ஜெயந்திநாதர் 5, நடராஜர் 5, பெருமாள் 5 மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு 12 என மொத்தம் 76 குண்டங்களில் சுமார் 400 கும்பங்கள் வைக்கப்பட்டு காலை, மாலை என ஒவ்வொரு யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன.

இன்று அதிகாலை 12-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. அதிகாலை 4 மணி அளவில் 12-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. அதைத் தொடர்ந்து தீபாராதனையும் பூர்ணாகுதியும் நடந்தது. அதைத் தொடர்ந்து பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க கடம் புறப்பாடு தொடங்கியது. தொடர்ந்து ராஜகோ புரத்திற்கு புனித நீர் ஊற்றப்படும் கடம் கோவிலின் மேற்கு வாசல் வழியாக அமைக்கப்பட்ட தற்காலிக பாதை மூலம் ராஜகோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அமைக்கப்பட்டுள்ள 9 கலசங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது.


தொடர்ந்து காலை 6.22 மணிக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பச்சை கொடி காட்டவும் 9 கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. அதைத் தொடர்ந்து கலசங்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதே நேரத்தில் மூலவர், சண்முகம், வள்ளி, தெய்வானை, பெருமாள், நடராஜர் உள்பட பரிவார மூர்த்திகள் சன்னதிகளில் உள்ள கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் தமிழில் மந்திரங்கள் ஓதப்பட்டது. 

கும்பாபிஷேகத்தை காண பக்தர்கள் கடற்கரை வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கும்பாபிஷேக நிகழ்வை கண்டு களிக்க நகர் முழுவதும் 70 பெரிய எல்இடி திரைகள் அமைக்கப்பட்டன. கும்பாபிஷேகம் முடிந்ததும் பக்தர்கள் மீது 20 ட்ரோன்கள் கொண்டு புனித நீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவை கோவில் வளாகத்திலும், கோவிலை ஒட்டி கடற்கரையிலும் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். விழாவில் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற பக்தர்களின் கோஷம் விண்ணை பிளந்தது. கோவில் வளாகத்தில் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்விழாவில் காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜேயந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீஅம்பலவான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், மாசிலமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், பொன்னம்பல தேசிக சுவாமிகள், காசிவாசி முத்துக்குமார சுவாமித்தம்பிரான், சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிவஞான பாலய சுவாமிகள், இராமனந்த குமாரபுர சுவாமிகள், நியமானந்த சுவாமிகள், பாலமுருகனடிமை சுவாமிகள், பிச்சை சிவாச்சாரியார், கே.சுப்பிரமணியரு, ராஜா பட்டர் எ சந்திரசேகர் பட்டர், செலவம் பட்டர் ஆகியோர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.


விழாவில் அமைச்சர்கள் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், பி.கே.சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.மணிவாசன், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, நகராட்சி நிர்வாகத்துறை இயக்குநர் / சிறப்பு அலுவலர் ப.மதுசூதன் ரெட்டி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் சி.பழனி, பேரூராட்சிகளின் இயக்குநர் / மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மா.பிரதீப்குமார், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், கூடுதல் காவல்துறை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம், தென்மண்டல காவல்துறை தலைவர் பிரேம் ஆனந்த் சின்கா, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் சந்தோஷ் ஹடிமணி, மதுரை சரக காவல் துறை துணைத் தலைவர் அபிநவ் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், உட்பட 9 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, கூடுதல் ஆணையர் பொ. ஜெயராமன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவராக பூச்சி எஸ்.முருகன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாறன், திருக்கோயில் தக்கார் ஆர். அருள்முருகள், இணை ஆணையர் ஞானசேகரன், திருக்கோயில் பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விழாவை முன்னிட்டு தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும் சென்னை, நெல்லையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. பக்தர்களுக்காக 15 இடங்களில் அன்னதானம் நடைபெற்றது. 


மக்கள் கருத்து

Om MurugaJul 7, 2025 - 01:39:45 PM | Posted IP 104.2*****

Om Muruga Potri....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory