» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அரசு மருத்துவமனைகளுக்கு செல்வதில் மக்கள் ஆர்வம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்

வெள்ளி 11, ஏப்ரல் 2025 10:44:25 AM (IST)



அரசு மருத்துவமனைகளுக்கு செல்வதில் கன்னியாகுமரி மாவட்ட அனைத்து தரப்பட்ட பொதுமக்களும் மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். 

கன்னியாகுமரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் புதிய கட்டடங்கள் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தும், நலத்திட்ட உதவிகள் வழங்கினார். 

விழாவில் அவர் பேசுகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரூ.20 கோடி மதிப்பில் 50 படுக்கை வசதியுடன் கூடிய அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டிடமும், ரூ.4 கோடி மதிப்பில் ரேடியோதெரபி கட்டிடம் என மொத்தம் ரூ.24 கோடி மதிப்பில் கட்டிட பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பல்வேறு புதிய பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக ரூ.90 இலட்சம் மதிப்பில் கன்னியாகுமரி அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1735 சதுரடியில் தரை மற்றும் முதல் தளங்களுடன், 100 நோயாளி உடனாளர்கள் தங்கும் வகையில் அறை திறந்து வைக்கபட்டுள்ளது. தொடர்ந்து ரூ.40.28 கோடி செலவில் கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சை மையம், கூடுதல் நூலக கட்டிடம், மாணவியர் விடுதி, மாணவர் விடுதி, தேர்வுகூட கட்டிடம், விரிவுரைகூடம், சலவை இயந்திரங்கள் மற்றும் உயர் மருத்துவ உபகரணங்கள் திறந்து வைக்கப்பட்டு, மக்கள் பயன்பெற்று வருகின்றனர். 

நமது தமிழ்நாடு முதலமைச்சர் பதவியேற்ற நாளிலிருந்து ரூ.40.28 கோடி மதிப்பில் கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கூடுதல் வசதிகள் செய்து, தமிழ்நாட்டிலேயே புகழ்பெற்ற மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. 100 ஏக்கர் பரப்பளவில் பசுமை நிறைந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக உள்ளது. மற்ற மருத்துவ கல்லூரியை விட நமது மருத்துவக்கல்லூரி மிகவும் மனநிறைவும் மன மகிழ்ச்சியும் வருகிறவர்களுக்கு கிடைக்கும் என்கிற வகையில் இந்த அமைப்பு, இயற்கையிலேயே அமைந்துள்ளது.

தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் பதவியேற்பதற்கு முன்பாக நமது ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 1200 முதல் 1300 நோயாளிகள் வந்து மருத்துவ சேவையை பெற்றுள்ளார்கள். ஆனால் தற்போது ஒரு நாளைக்கு 2500 நோயாளிகள் வந்து மருத்துவ சேவையை பெற்றுள்ளார்கள். அரசு மருத்துவ சேவையை பயன்படுத்துகிற வண்ணம் கன்னியாகுமரி மாவட்ட மக்களின் எண்ணிக்கை கூடுகிறது. பொதுமக்கள் அதிகமாக வரும் அளவுக்கு மருத்துவ வசதிகள் நமது மருத்துவக்கல்லூரியில் மேம்படுத்தப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். 

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தங்களது இலட்சியம் என்னவென்று கேட்டார்கள். அதற்கு நான் ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு மக்கள், மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசு மருத்துவமனைகளில் 100 சதவீதம் அரசு மருத்துவ சேவையை மக்கள் பயன்படுத்திக்கொள்கிற நிலையை உருவாக்குவது தான் என்னுடைய நோக்கம் என்றேன். அதன்படி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி எண்ணமானது நிறைவேறி கொண்டிருக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அதற்கு முழு காரணம் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் உள்ளிட்டவர்களால் தான் மருத்துவ சேவையை உயர்த்தி கொண்டிருக்கிறது. 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடந்த வாரம் உதகையில் 700 படுக்கை கொண்ட மருத்துவமனையினை துவக்கி வைத்தார்கள். உதகை என்பது மலைவாழ் மக்கள் குறிப்பாக 6 வகை பழங்குடியினர் மக்கள் பயன்பெறும் வகையில் திறந்து வைக்கபட்டுள்ளது. இந்தியாவிலேயே மலைப்பகுதியில் சிம்லாவில் மட்டும் தான் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. அதற்குஅடுத்தப்படியாக நமது உதகை மாவட்டத்தில் உள்ளது. இதற்குமுன் அங்கு உள்ள மக்கள் மருத்துவம் பார்பதற்கு 2 மணி நேரம் செலவு செய்து கோவைக்கு தான் செல்வார்கள்.

இனி அங்கேயே மருத்துவம் பார்க்கும் வகையில் அங்கு மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு, திறக்கப்பட்டுள்ளது. நமது துறையில் பணியாற்றிக்கொண்டிருக்கும் குறிப்பாக மக்களைத்தேடி மருத்துவ பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள் உள்ளிட்ட மருத்துவ களப்பணியாளர்களை பாராட்டுகிறேன். 

மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தொற்ற நோய்களான இரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு நோய், பிசியோதரபி உள்ளிட்ட நோய்களுக்கு வீடுகளுக்கே சென்று சுகாதார தன்னார்வலர்கள் பரிசோதனை மேற்கொண்டு தகுதியானவர்களுக்கு, தேவையான அளவில் மருந்துகள் வழங்கி வருகிறார்கள். தமிழ்நாட்டில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தினை சிறப்புற செயல்படுத்திய நமக்கு உலக நாடுகள் அளவில் கடந்த 25.09.2024 அன்று அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடைபெற்ற 79வது ஐக்கிய நாடுகள் பொதுசபையின் United Nation Interagency Task Force Award-2024 விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

நமது தமிழ்நாடு முதலமைச்சர் 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளியில் இத்திட்டத்தினை துவக்கி வைத்து இத்திட்டம் 1 கோடி பயனாளிகளை சென்றடைய வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் தற்போது இத்திட்டத்தின் கீழ் இதுவரை 2 கோடி 40 இலட்சம் பயனாளிகள் பயன்பெற்று வருகிறார்கள். ஐ.நா சபை வழங்கிய இந்த விருது அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவகளப்பணியாளர்களுக்கே அர்ப்பணம் செய்யப்படுகிறது. 

இதயம் காப்போம் திட்டம், சிறுநீரகம் காப்போம் திட்டம், மக்களைத்தேடி மருத்துவ ஆய்வக திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்ட இடம் கிருஷ்ணகிரி, இதயம் காப்போம் திட்டம் தொடங்கப்பட்ட இடம் மேல்மருவத்தூர், சிறுநீரக பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்ட இடம் சேலம், மக்களைத்தேடி மருத்தவ ஆய்வக திட்டம் கன்னியாகுமரி மாவட்டம் தொல்லவிளை பகுதியில் தான் தொடங்கப்பட்டது. 

அதனடிப்படையில் இன்று தமிழ்நாடு நகர்ப்புற சுகாதார அமைப்பு சீர்திருத்த திட்டத்தின் கீழ் ரூ.1.25 இலட்சம் மதிப்பில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவீன கட்டண படுக்கை வசதிகளுடன் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து சேலம், மதுரை, கோவை, பொள்ளாச்சி, கும்பகோணம், ஈரோடு, கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை, கிண்டி முதியோர் மருத்துவமனை, திருவண்ணாமலை, கோவில்பட்டி, திருநெல்வேலி, இன்று கன்னியாகுமரி உள்ளிட்ட 12 இடங்களில் அரசு மருத்தவமனைகளில் நவீன கட்டண படுக்கையறைகளுடன் கூடிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் கடலூர், காஞ்சிபுரம், தென்காசி, பெரம்பலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, தருமபுரி, தஞ்சாவூர் ஆகிய 8 மருத்துவமனைகளில் விரைவில் திறந்து வைக்கப்படும்.

மகப்பேறு அறை, கர்ப்பிணிகளுக்கான அறுவை அரங்கின் தரம் உயர்த்தும் திட்ட சான்றிதழ் தமிழ்நாட்டிற்கு கடந்த நான்கு ஆண்டுகளில் 82 சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பத்மநாபபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, குழித்துறை அரசு மருத்துவமனை மற்றும் பூதப்பாண்டி அரசு மருத்துவமனை ஆகிய 4 மருத்துவமனைகளுக்கு சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளது. தேசிய உறுதி திட்ட விருது கடந்த நான்கு ஆண்டுகளில் 755 மருத்துவமனைகளுக்கு விருதுகள் பெறப்பட்டுள்ளது. 

இதில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 21 மருத்துவமனைகளுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. சமூக அளவிலான புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் 2023-2024 ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ.3.31 கோடி மதிப்பில் ஈரோடு, திருப்பத்தூர், கன்னியாகுமரி மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள துணை சுகாதார நலவாழ்வு மையங்களில் (HWC-HSCs), இடைநிலை சுகாதார பணியாளர்கள் (MLHP) மூலம் "சமூக அளவிலான புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள்" முகாம் 22.11.2023 அன்று காளிங்கராயன்பாளையம், துணை சுகாதார நிலையம், ஈரோடு மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. 22.11.2023 முதல் 05.04.2025 வரை 18 வயதுக்கு மேற்பட்ட 4 மாவட்ட மக்கள் 515,18,623 அழைப்பிதழ் வழங்கப்பட்டது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 15,18,623 தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள். இதில் 4,14,892 அழைப்பிதழ் வழங்கப்பட்டதில் அனைவரும் பரிசோதனை மேற்கொண்டு 100 சதவீதத்தினை எட்டியுள்ளது. 

தொடர்ந்து இன்று நமது மாவட்டத்தில் ரூ.1.45 கோடி மதிப்பில் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சீரமைக்கப்பட்ட தார்சாலை, 15 வது நிதிகுழு திட்டத்தின் கீழ் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முட்டத்தில் ரூ.50 இலட்சம் மதிப்பில் வட்டார பொது சுகாதார அலகு கட்டிடமும், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அகஸ்தீஸ்வரத்தில் ரூ.50 இலட்சம் மதிப்பில் வட்டார பொது சுகாதார அலகு கட்டிடமும், அழகப்பபுரம் தெற்கு பகுதியில் ரூ.35 இலட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலைய கட்டிடமும், கன்னியாகுமரி தெற்கு பகுதியில் ரூ.35 இலட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலைய கட்டிடமும், அக்கரைப்பகுதியில் ரூ.30 இலட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலைய கட்டிடமும், மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வன்னியூர் பகுதியில் ரூ.35 இலட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலைய கட்டிடமும், சாணி பகுதியில் ரூ.30 இலட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலைய கட்டிடமும், கிள்ளியூர் வட்டத்துக்குட்பட்ட கிள்ளியூர் பகுதியில் ரூ.50 இலட்சம் மதிப்பில் வட்டார பொது சுகாதார அலகு கட்டிடமும் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
மேலும் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணன்கோவிலில் ரூ.30 இலட்சம் மதிப்பில் நகர்ப்புற துணை சுகாதார நிலைய கட்டிடமும், 

தெங்கம்புதூரில் ரூ.30 இலட்சம் மதிப்பில் நகர்ப்புற துணை சுகாதார நிலைய கட்டிடமும், வட்டவிளைப் பகுதியில் ரூ.30 இலட்சம் மதிப்பில் நகர்ப்புற துணை சுகாதார நிலைய கட்டிடமும், வடசேரி பகுதியில் ரூ.30 இலட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலைய கட்டிடமும், மத்திய மாநில அரசுகளின் நிதி பங்களிப்பு திட்டத்தின் கீழ் தலா ரூ.15 இலட்சம் மதிப்பில் சித்தா பிரிவு கட்டிடம் தக்கலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கோதநல்லூர் பகுதியிலும், இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் இராஜாக்கமங்கலத்திலும் கட்டப்பட்டு இன்று திறக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் என்னிடம் ரூ.100 கோடி மதிப்பில் மருத்தவ மேம்பாட்டு பணிகளுக்காக என்னிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்கள். கண்டிப்பாக இந்த கோரிக்கையினை நமது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துக்கொள்வதோடு, அரசு மருத்துவமனைகளுக்கு செல்வதில் கன்னியாகுமரி மாவட்ட அனைத்து தரப்பட்ட பொதுமக்களும் மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசினார்.

அதனைத்தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகம், 10 பயனாளிகளுக்கு நோய் தடுப்பு பாராமரிப்பு பெட்டகம் உள்ளிட்ட 134 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். 

நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் இராமலெட்சுமி, இணை இயக்குநர் பொதுசுகாதாரம் சென்னை செந்தில், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, மாவட்ட சுகாதார அலுவலர் (மு.கூ.பொ) பிரபாகரன், உறைவிட மருத்தவர் ஜோசப்சென், உதவி உறைவிட மருத்துவர் விஜயலெட்சுமி, உதவி இயக்குநர்கள் இராமலிங்கம் (பேரூராட்சிகள்), சிதம்பரம் (ஊராட்சிகள்), துணை மேயர் மேரிபிரின்சி லதா, மண்டலத்தலைவர் செல்வகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பலீலா ஆல்பன், இந்து சமய அறங்காவலர் குழு தலைவர் (சுசீந்திரம்) பிரபா ஜி இராமகிருஷ்ணன், மாநகராட்சி உறுப்பினர் மோனிகா விமல், மருத்தவர்கள், செவிலியர்கள், துறை அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள், மாணவ மாணவியர்கள் பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory