» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பகவதி அம்மன் கோயிலுக்கு ரூ.6 கோடியில் தங்க விக்ரகம் வழங்கிய கேரள தொழிலதிபர்!
செவ்வாய் 4, பிப்ரவரி 2025 5:44:44 PM (IST)

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு 6 கிலோ 800 கிராம் தங்கத்திலான ரூ.6 கோடி மதிப்பில் அம்மன் தங்க விக்ரகத்தை கேரள தொழிலதிபர் காணிக்கையாக வழங்கினார்.
பிரசித்திபெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். பல்வேறு பிற மாநிலங்கள், மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் இங்கு வரும்போது அவர்கள் வேண்டுகிற விருப்பம் நிறைவேறுவதற்காக நேர்ச்சை செய்வது வழக்கம்.
கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் ரவிப்பிள்ளை (61). தொழிலதிபரான இவர், கன்னியாகுமரி பகவதியம்மனின் தீவிர பக்தராவார். இவர் ஆண்டுதோறும் கோயிலுக்கு வந்து பல நேர்த்திகடன்களை செய்து வந்தார். இந்நிலையில், அவரது குடும்பத்திலும், தொழில் நிமித்தமாகவும் நினைத்த வேண்டுதல் நிறைவேறியதால் ரூ.6 கோடி மதிப்பிலான தேவி குமாரி (பகவதி அம்மன்) விக்ரகத்தை செய்து கோயிலுக்கு காணிக்கையாக வழங்கினார். இது 6 கிலோ 800 கிராம் எடை கொண்ட தங்கத்தினால் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் தினமும் காலை, மதியம், மாலை என 3 வேளை அம்மனின் விக்ரகத்திற்கு பூஜை செய்து கோயிலை சுற்றி வலம் வரும் வைபவம் காலகாலமாக நடைபெற்று வருகிறது. இதற்கு வெள்ளியிலான அம்மன் விக்ரகம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதை கோயிலுக்கு வரும்போது பார்த்த ரவிபிள்ளை தற்போது தினசரி மூன்று வேளை பூஜைக்காக அதே அளவிலான அம்மன் தங்க விக்ரகத்தை காணிக்கையாக வழங்கியுள்ளார்.
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு மனைவி, மக்களுடன் வந்திருந்த ரவிபிள்ளை அம்மனின் தங்க விக்ரகத்தை குமரி மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா ராமகிருஷ்ணனிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் அறநிலையத் துறை இணை ஆணையர் ஜான்சிராணி, உறுப்பினர்கள் ராஜேஷ், துளசிதரன் நாயர், சுந்தரி, தொகுதி கண்காணிப்பாளர் மற்றும் கோவில் மேலாளர் ஆனந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அம்மன் விக்ரகம் மூலஸ்தான கருவறை வாசலில் வைத்து முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. பின்னர் கொலு மண்டபத்தில் கொண்டு வரப்பட்டு தங்க சிலையின் எடை மற்றும் அளவுகளை சரிபார்த்து பதிவு செய்தனர். சிலையை வைப்பதற்காக 3 கிலோ எடையில் வெள்ளியிலான ஆமை பீடத்தையும் பக்தர் ரவிப்பிள்ளை காணிக்கையாக வழங்கினார்.
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு அம்மனின் தங்க விக்ரகம் வழங்கிய நேர்த்தி கடனால் தனது வாழ்நாள் லட்சியம் நிறைவேறி பெரும் புண்ணியம் பெற்றது என கூறினார். இந்த தங்க விக்ரகத்தை கேரள மாநிலம் வைக்கத்தைச் சேர்ந்த கைலாஷ் குழுவினர் வடிவமைத்து கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த தெலுங்கானா தம்பதியர் விபத்தில் மரணம்
சனி 17, ஜனவரி 2026 5:23:06 PM (IST)

உடையார்விளையில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் : முன்னாள் அமைச்சர் பச்சைமால் மரியாதை
சனி 17, ஜனவரி 2026 3:19:54 PM (IST)

பாறையில் தலை சிக்கி இளைஞர் உயிரிழப்பு: திற்பரப்பு படகு பகுதியில் சோகம்!
சனி 17, ஜனவரி 2026 12:39:45 PM (IST)

ரங்காபானி-நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயில்: இன்று முதல் தொடக்கம்!
சனி 17, ஜனவரி 2026 10:58:13 AM (IST)

பட்ஜெட்டில் கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டம் அறிவிக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு
சனி 17, ஜனவரி 2026 10:32:11 AM (IST)

அதிமுக சார்பில் புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் சீர் வரிசைகள் வழங்கும் நிகழ்ச்சி!
புதன் 14, ஜனவரி 2026 12:53:02 PM (IST)

