» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி மாவட்டத்தில் மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கல்!
திங்கள் 23, செப்டம்பர் 2024 5:28:26 PM (IST)
குமரி மாவட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் த.மனோ தங்கராஜ் வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் குளச்சல் செயின்ட் மேரிஸ் மேல்நிலைப்பள்ளி, திங்கள் நகர் பேரூராட்சிக்குட்பட்ட மாங்குழி புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப்பள்ளி, குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காரங்காடு புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (23.09.2024) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் முன்னிலையில் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி பேசுகையில் "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு 2024-25ம் ஆண்டிற்கான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினை கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவக்கி வைத்தார்கள்.
அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. இன்றைய தினம் அரசு உதவி பெறும் பள்ளிகளான குளச்சல் செயின்ட் மேரிஸ் மேல்நிலைப்பள்ளி, திங்கள் நகர் மாங்குழி புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப்பள்ளி, காரங்காடு புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.
தமிழ்நாடு முதலமைச்சர் மாணவ மாணவியர்கள் ஏற்றத்தாழ்வு இல்லாமால் படிப்பதற்கு விலையில்லா சீருடைகள் வழங்கும் திட்டம், மாணவ மாணவியர்கள் பசியின்றி படிப்பதற்கும் மதிய உணவுத்திட்டம், உயர்கல்வி படிப்பதற்கு மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமை பெண் திட்டம், இத்திட்டத்தினை விரிவாக்கி மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் தமிழ்புதல்வன் திட்டம் உள்ளிட்டவைகளை வழங்கி வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் சிரமமின்றி பள்ளிகளுக்கு சென்று கல்வி பயில வேண்டுமென்ற உயரிய நோக்கில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசால் மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்களையும் நீங்கள் பெற்று, உயர்கல்வி பயின்று வாழ்வில் ஏற்றம் பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசினார்.
நிகழ்ச்சிகளில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதாண்டாயுதபாணி, குளச்சல் நகர்மன்ற தலைவர் நசீர், திங்கள் நகர் பேரூராட்சி தலைவர் சுமன், பள்ளி தாளாளர்கள் அருட்பணி ஜெகன் (செயின்ட் மேரிஸ் மேல்நிலைப்பள்ளி), அருட்பணி சகாய ஜெரால்டு எபின் (புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப்பள்ளி), தலைமையாசிரியர்கள் ரெபிசா, ராஜேஷ், லெட்சுமிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவர் பி.எஸ்.சந்திரா, மாநகராட்சி மண்டல தலைவர் ஜவஹர், வழக்கறிஞர் அகஸ்தீசன், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.