» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கருங்கலில் ரூ.42 இலட்சம் மதிப்பில் மீன் சந்தை: அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்
திங்கள் 23, செப்டம்பர் 2024 4:47:00 PM (IST)
கருங்கல் பகுதியில் ரூ.42 இலட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட மீன் சந்தையை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்ட பேரூராட்சி துறை சார்பில் கருங்கல் தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மீன்சந்தை மற்றும் கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் சாலை சீரமைக்கும் பணிகளை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் செ.ராஜேஷ் குமார் முன்னிலையில் இன்று (23.09.2024) திறந்து வைத்தார்.
பின்னர் அவர் தெரிவிக்கையில்- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டிற்குட்பட்ட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை அறிவித்து,சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதனடிப்படையில் கருங்கல் தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட மீனவர்களின் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு 2023-2024 திட்டத்தின் கீழ் ரூ.42 இலட்சம் மதிப்பில் கருங்கல் பகுதியில் மேம்படுத்தப்பட்ட மீன் சந்தை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும் கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பாலூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.24 இலட்சம் மதிப்பில் பாலூர் கழுவன்திட்டை கோட்டவிளை சானல்கரை சாலை சீரமைப்பு பணியையும், திப்பிறமலை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.17.80 இலட்சம் மதிப்பில் பாலூர் சானல்கரை தாணிக்கோட்டம் சாலை சீரமைக்கும் பணியினையும், மத்திகோடு ஊராட்சிக்குட்பட்ட புனன்திட்டை கடுக்காச்சிவிளை பகுதியில் ரூ.13.50 இலட்சம் மதிப்பில் சாலை சீரமைப்பு பணி மற்றும் ரூ.12 இலட்சம் மதிப்பில் புலயன்விளை சாலை சீரமைப்பு பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து முள்ளாங்கினாவிளை ஊராட்சிக்குட்பட்ட இடையன்கோட்டை தோப்புகுளம் பகுதியில் ரூ.22 இலட்சம் மதிப்பில் சாலை சீரமைக்கும் பணி மற்றும் கொல்லஞ்சி ஊராட்சிக்குட்பட்ட குட்டன்விளை காவுமூலை பகுதியில் ரூ.21 இலட்சம் மதிப்பில் சாலை சீரமைக்கும் பணிகள் என மொத்தம் 1.26 கோடி மதிப்பில் சாலை சீரமைக்கும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இச்சாலைகளை தரமானதாக இருக்கவும், விரைந்து பணியினை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், தெரிவித்தார்கள்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் கருங்கல் தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் சத்தியதாஸ், கருங்கல் தேர்வுநிலை பேரூராட்சி தலைவர் சிவராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் அஜித் (பாலூர்), பிரபா (முள்ளங்கினாவிளை), கோபால் (கீழ்குளம்), கிள்ளியூர் ஊராட்சிமன்ற துணை தலைவர் சத்தியராஜ், அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.