» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
இந்து தர்மத்தை, சனாதனத்தை அழிக்க முடியாது: திருவட்டாரில் ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு
ஞாயிறு 22, செப்டம்பர் 2024 8:18:04 PM (IST)
இந்து தர்மத்தை அழிக்க பலர் பல்வேறு முயற்சிகள் செய்தனர் என்று திருவட்டாரில் பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பேசினார்.
வெள்ளிமலை இந்து தர்ம வித்யா பீடத்தின் 44-வது சமய வகுப்பு மாணவர் மாநாடு மற்றும் 35-வது வித்யா ஜோதி பட்டமளிப்பு விழா மற்றும் முதல் வித்யா பூஷன் பட்டமளிப்பு விழா குமரி மாவட்டம் திருவட்டாரில் நடந்தது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு வித்யாஜோதி மற்றும் வித்யாபூஷன் பட்டங்களை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: திருவட்டார் ஆதிகேசவனை தரிசிக்க வருவது என்னைப்பொறுத்தவரை புனித பயணம். இந்துதர்ம வித்யாபீடம் இந்த பகுதி மக்களுக்கும் இந்து தர்மத்துக்கும், பாரதத்துக்கும் சுமார் 40 ஆண்டுகளாக சேவை செய்து வருகிறது. இந்துதர்மம் தான் பாரதத்தை உருவாக்கியது. பாரதம், இந்து தர்மத்தை பிரிக்க முடியாதது என்பதை உணர்ந்து மகிழ்ச்சி அடைய வேண்டும்.
ஆயிரம் ஆண்டுகளாக அன்னியரின் ஆட்சியில் நம் தர்மத்தை அழிக்கும் அத்தனை முயற்சியையும் செய்தார்கள். அதையெல்லாம் கடந்து நாம் வந்திருக்கின்றோம். நமது சனாதன தர்மம் அழிக்க முடியாதது.
ஆயிரம் ஆண்டுகளாக சில புதியவர்கள் வந்தார்கள். அவர்கள் எங்கள் மதம் தான் சிறந்தது, நீங்கள் இங்கே வரவேண்டும் எனச்சொன்னார்கள். கோவில்களை அழித்தார்கள். இப்படி அனைத்தையும் அழித்துக்கொண்டே வந்தனர். ஆனாலும் சனாதன தர்மத்தை அழிக்க முடியவில்லை.
வெளிநாட்டவர்கள் சென்றபின் நம் ஆட்சியாளர்கள் நம்மை பலப்படுத்துவார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால், அவர்கள் பலவீனப்படுத்தினார்கள். சுதந்திரத்தின்போது பொருளாதாரத்தில் உலக அளவில் 6-வது இடத்தில் இருந்தோம். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 11-வது இடத்துக்கு தள்ளப்பட்டோம். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் சனாதான ஆட்சியில் பொருளாதாரத்தில் 5-வது இடத்துக்கு வந்துள்ளோம். இன்னும் சிறிது காலத்தில் 3-வது இடத்துக்கு வர உள்ளோம்.
பிரதமர் மோடி வேத மந்திரத்தின் பொருளைத்தான் எல்லோருக்குமாக, எல்லோருக்குமான வளர்ச்சி என சொல்கிறார். மொழியை வைத்து எங்களை பிரிக்க முடியாது. வெள்ளைக்காரர்கள் சென்ற பின் பல ஏமாற்று வேலைகள் இங்கு அரங்கேறின. தவறான கோட்பாடுகள் நமக்கு சொல்லப்பட்டன. அதில் முக்கியமானது மதச்சார்பின்மை என்பதாகும்.
25 ஆண்டுகளுக்கு பிறகு அவசரகால நிலை அமல்படுத்தப்பட்டபோது, சில சமுதாயத்தை திருப்திபடுத்துவதற்காக மதசார்பின்மை என்ற வார்த்தை சொருகப்பட்டது என்பது தான் உண்மை. நாடாளுமன்ற விவாதத்தின்போது அதை அறிமுகப்படுத்தியவர் கூடச் சொன்னார். நம் நாட்டில் உள்ள மதசார்பின்மை என்பது ஐரோப்பாவில் உள்ள மதச்சார்பின்மை அல்ல. நமது நாடு தர்மத்தின் அடிப்படையிலான நாடு. தர்மத்தின் அடிப்படையில் அனைவரும் சமம். சர்வ மத சமத்துவம் தான் உண்மையான மதச்சார்பின்மை. உலகம் முழுவதும் பாரத தர்மம், சனாதன தர்மம் ஓங்கி உயர்வடைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் ஆளுநர் ஆர்.என்.ரவி திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோவிலுக்கு வந்த ஆளுநருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.