» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

போலீஸ் ஏட்டுவை கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற ரவுடி மீது துப்பாக்கி சூடு!

ஞாயிறு 22, செப்டம்பர் 2024 11:22:07 AM (IST)

போலீஸ் ஏட்டுவை கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற ரவுடி ஆல்வினை துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்தனர். இதில் அவரது 2 கால்களிலும் குண்டு பாய்ந்தது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வாத்தியார்விளையை சேர்ந்தவர் ஆல்வின் (40). இவர் மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி கோவை ஆவாரம்பாளையம்-நவ இந்தியா சாலையில் சத்யபாண்டி(31) என்ற ரவுடி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆல்வின், கூட்டாளிகள் சஞ்சய் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த கொலை வழக்கில் சரண் அடைந்த ஆல்வின் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதன்பின்னர் சத்யபாண்டி கொலை வழக்கில் ஆல்வின் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். இதைத்தொடர்ந்து ஆல்வினை பிடித்து ஆஜர்படுத்துமாறு கோவை கோர்ட்டில் கடந்த ஜூலை மாதம் பிடிவாரண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 2 மாதங்களாக ஆல்வினை தேடி வந்தனர். இந்தநிலையில் கோவை கொடிசியா மைதான பகுதியில் ஆல்வின் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

நேற்று அதிகாலை 2.35 மணியளவில் தனிப்படையினர் ஆல்வினை தேடி கொடிசியா மைதான பகுதிக்கு சென்றனர். போலீசாரை பார்த்ததும் ஆல்வின் தப்பி ஓட முயன்றார். அவரை பிடிக்க போலீஸ் ஏட்டு ராஜ்குமார் முயன்றபோது ஆல்வின் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் போலீஸ்காரர் ராஜ்குமாரை குத்தியதாக தெரிகிறது. இதில் ராஜ்குமாரின் இடது மணிக்கட்டு பகுதியில் கத்தி குத்து பட்டு காயம் அடைந்தார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியால் ரவுடி ஆல்வினை நோக்கி 3 முறை சுட்டார். இதில் 2 குண்டுகள் ஆல்வினின் 2 கால் மூட்டுகளிலும் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். இதைத்தொடர்ந்து ரவுடி ஆல்வின் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். கத்தி குத்தில் காயம் அடைந்த போலீஸ்காரர் ராஜ்குமாரும், அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

விசாரணையில் கோவையில் கடந்த ஆண்டு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சத்யபாண்டி, பரமக்குடியை சேர்ந்த பசும்பொன் குமார் (43) என்பவரின் நெருங்கிய கூட்டாளி. பசும்பொன் குமார் மீதும் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. சத்யபாண்டி கொலைக்கு ஆல்வினை பழிவாங்க பசும்பொன் குமார் கோஷ்டியினர் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ஆல்வினை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory