» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் : தலைமை செயலாளர் ஆலோசனை!

சனி 21, செப்டம்பர் 2024 4:29:46 PM (IST)



வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர் முருகானந்தம் காணொளி காட்சி வாயிலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோருடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.

இக்கலந்தாய்வுக்கு பின் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சுந்தரவதனம், முன்னிலையில் வடகிழக்கு பருவமழை காலத்தை எதிர்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கலந்தாய்வு மேற்கொண்டு, துறை சார்ந்த அலுவலர்களிடம் தெரிவிக்கையில் "கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் அக்டோபர் மாதம் 2024 முதல் ஜனவரி மாதம் 2025 வரை வடகிழக்கு பருவமழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. 

இந்த கால கட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் பேரிடரை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும். நமது கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் உள்ளிட்ட அணைகள் உள்ளன. இந்த அணைகளில் பருவ மழையின்போது தண்ணீர் நிரம்பும்போது அவற்றினை நீர்வளத்துறை செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர்கள் உள்ளிட்டோர் கண்காணித்து உபரி நீரினை படிப்படியாக திறந்து விடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

மேலும் பேரிடர் காலங்களில் தாமிரபரணி ஆற்றின்வழியாக தேங்காய்பட்டணம் சென்றடையும் தண்ணீர் மற்றும் பழையாறு செல்லும் சுசீந்திரம் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தவிர்த்திடும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட நீர் நிலைகளான வாய்க்கால்கள், ஓடைகள், குளங்கள் அனைத்தினையும் தூர் வார வேண்டும் என நீர்வளத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறையினர் (கட்டிடம்) பழுதடைந்துள்ள கட்டிடங்களை கண்டறிந்து உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக பள்ளி கல்வித்துறை தங்களின் கீழ் உள்ள அனைத்து பள்ளிகளையும் ஆய்வு மேற்கொண்டு பழுதடைந்த வகுப்பறைகள் இருப்பின் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி முகமை உள்ளிட்ட துறையினரின் கவனத்திற்கு கொண்டு சென்று அவற்றை சீரமைப்பது அல்லது அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென முதன்மை கல்வி அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வருவாய் துறையின் சார்பில் சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், அனைத்து வட்டாட்சியர்கள், அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் தாழ்வான பகுதிகள் மற்றும் பேரிடர் காலங்களில் தண்ணீர் அதிகமாக செல்லும் பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதை உறுதி செய்திட வேண்டும். 

தீயணைப்பு துறையினர் மீட்பு பணிக்கான படகுகள் மற்றும் பயிற்சி பெற்ற மீனவர்களை தயார் நிலையில் வைத்துக்கொள்வதோடு அதிகமாக தண்ணீர் தேங்கும் பகுதிகளில் தண்ணீரை அகற்றுவதற்கான அதிநவீன இயந்திரங்களை தயார் நிலையில் வைக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது. காவல் துறையினர் சொத்தவிளை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வருவதை கண்காணித்து தடுக்கும் வகையில் எச்சரிக்கை பலகைகள் உள்ளிட்டவைகள் மூலமாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் நெடுஞ்சாலைத்துறையினர் பழுதடைந்த சாலைகளை சீரமைப்பதோடு, பேரிடர் காலங்களில் சாலைகளின் அருகாமையிலுள்ள மரங்கள் விழும்போது உடனடியாக அதனை அப்புறப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள கோட்டப் பொறியாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்சார துறையினர் வடகிழக்கு பருவமழையின்போது மாவட்டத்திற்கு ட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் தங்குதடையின்றி மின்சாரம் வழங்குவதோடு துண்டிக்கப்பட்ட பகுதிகளை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது. 

பொது சுகாதாரத்துறையினர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்வதோடு நடமாடும் மருத்துவ வாகனங்களையும் தயார் நிலையில் வைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளை கண்காணிக்கவும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் வழங்கிட மாநகராட்சி ஆணையர் அவர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும் அனைத்து வட்டாட்சியர்களும் தங்களின் வட்டங்களுக்குட்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளின் தலைவர்களுக்கு தண்ணீர் அதிகம் வரும்பொழுது மடைகளை திறந்து விடும் நபர்களை கண்டறிந்து உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டுமென அறிவுறுத்தப்படுவதோடு, அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் அவர்களுக்கான பகுதிகளை 24 மணிநேரமும் கண்காணித்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் கட்டிடங்கள் தொழிற்சாலைகள், அரசு துறை நிறுவனங்கள், வீடுகள் உள்ளிட்டவை பழுதடைந்துள்ளது என கண்டறியப்பட்டால் உடனடியாக அவற்றினை அகற்றிட துறை சார்ந்த அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வரும் பேரிடர் காலங்களில் விடுமுறை எடுப்பதை மாவட்ட அலுவலர்கள் உள்ளிட்டோர் தவிர்க்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது. வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, உதவி ஆட்சியர் (பயிற்சி) சுஷ்ஸ்ரீ சுவாங்கி குந்தியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுகிதா (பொது), சாந்தி (வளர்ச்சி), இணை இயக்குநர்கள் ஆல்பர்ட் ராபின்சன் (வேளாண்மை), ராதாகிருஷ்ணன் (கால்நடைப் பராமரிப்புத் துறை), நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி, நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருட்சன் பிரைட், நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் சத்திய மூர்த்தி, உதவி இயக்குநர்கள் சத்திய மூர்த்தி (பேரூராட்சிகள்), சாந்தி (ஊராட்சிகள்), உதவி ஆணையர் (கலால்) லொரைட்டா, மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கனகராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனைவர் பாலதண்டாயுதபாணி, பேரிடர் வட்டாட்சியர் சுசீலா, வட்டாட்சியர்கள் முருகன் (அகஸ்தீஸ்வரம்), ஜூலியன் ஹூவர் (விளவங்கோடு), சஜித் (கல்குளம்), கோலப்பன் (தோவாளை), கருப்பசாமி (திருவட்டார்), தனி வட்டாட்சியர் கண்ணன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory