» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரியிலிருந்து அமிர்தசரஸ்-க்கு நேரடி ரயில்: பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!

சனி 21, செப்டம்பர் 2024 12:46:26 PM (IST)

கன்னியாகுமரியிலிருந்து மதுரை, திருச்சி, சென்னை வழியாக அமிர்தசரஸ்-க்கு நேரடி ரயில் இயக்க சென்னை –நிசாமுதீன் ரயிலை ஒருமுனை அமிர்தசரஸ் க்கும் மறுமுனை கன்னியாகுமரி வரை நீட்டித்து இயக்க வேண்டும் என்று பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்களின் உள்ள அமிர்தசரஸ்  என்ற ஊரில் மிகமிக முக்கிய  பொற்கோவில் அமைந்துள்ளது. இதுதவிர , ஜாலியன்வாலா பாக் தேசிய நினைவிடம், வாகா (இந்தியா-பாகிஸ்தான் எல்லைச் சாவடி), துர்ஜியானா கோயில் (இலக்குமி நாராயணன் கோயில்) மற்றும் கோபிந்த்கர் கோட்டை முதலியன உள்ளன. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஒரே சாலை வழி எல்லையாக வாகா எல்லை உள்ளது. 

இரு நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் தினமும் மாலையில் கம்பீரமான முறையில் நிகழ்த்தும் கொடியிறக்க நிகழ்ச்சி இங்கு மிகவும் பிரபலமாகும். இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தினமும் மாலையில் முரசு மற்றும் ஷாக்ஸ் போன்ற மியூசிக் பின்னணி இசையுடன் அணிவகுப்பு நிகழ்ச்சி அரை மணி நேரத்துக்கு நடத்துகிறார்கள். 

பார்வையாளர்களின் உற்சாக கரவொலி மற்றும் மியூசிக் ஒலிகளோடு உணர்ச்சிகரமான வியத்தகு காட்சிகள் இந்த அணிவகுப்பு நிகழ்வு தினமும் இரு நாட்டு ராணுவ வீரர்களால் நடந்து கொண்டிருக்கிறது. இரு நாட்டு தேசப் பற்றை வெளிப்படுத்தும் இந்த நிகழ்வைக் காண ஏராளமான சுற்றுலா பயணிகள் தினந்தோறும் அங்கு கூடுகின்றனர். கிட்ட தட்ட ராணுவ முகாமாக, பதற்றமாக இருக்கும் வாகா எல்கைக்கு சென்று வரும் போது தான் ராணுவ வீரர்கள் நாட்டை காக்கும் பற்றிய,பார்ப்பவர்களுக்கு இந்திய தேசியத்தின் மீதான நன்மதிப்பு, பாசம் அபரிவிதமாக பொங்கும்.தன் வாழ்நாளில் இந்தியாவின் ஒவ்வொரு மகனும் பார்க்க வேண்டிய இடம் வாகா எல்லைச் சாவடி.

இவ்வாறு சிறப்பு மிகுந்த இடத்தை இந்தியாவின் தெற்கே கடைசியில் உள்ள தமிழ்நாட்டில் இருந்து நேரடியாக சென்று பார்ப்பதற்கு நேரடி ரயில் வசதி இல்லை. சரி போனால் போகட்டும் சென்னையிலிருந்து நேரடி ரயில் இருக்கும் இங்கிருந்து ஒரு ரயிலில் சென்னை சென்று விட்டு அங்கிருந்து அங்கிருந்து அமிர்தசரஸ் செல்லலாம் என்றாலும் அவ்வாறு செல்வதற்கு ரயில் வசதி இல்லை. 

சரி சென்னையிலிருந்து இல்லை என்றால் பெங்களுரிலிந்தாவது இருக்கலாம் அல்லது விஜயவாடாவிலிருந்து இருக்கும் என்று பார்த்தால் அங்கிருந்து இல்லை. மதுரை, திருச்சி, ராமேஸ்வரம், சேலம், கோயம்புத்தூர், காட்பாடி, திருப்பதி, பெங்களுர், மைசூர், ஐதராபாத், விஜயவாடா, ஹப்ளி, புனே, என தென்இந்தியாவின்  எந்த ஒரு நகரங்களிலிருந்து அமிர்தசரஸ் க்கு நேரடி ரயில் சேவை இல்லை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த ரயில் இணைப்பு வேண்டும் என்று ஏற்படுத்தப்படாமல் உள்ளதா அல்லது அறியாமல் விடப்பட்டதா என்று தெரியவில்லை

சரி  அமிர்தசரஸ் க்கு செல்ல எங்கிருந்து ரயில் சேவை உள்ளது என்று பார்த்தால் கேரளாவில் உள்ள கொச்சுவேலி இருந்து மேற்கு கடற்கரை ஓரமாக உள்ள இடங்கள் கொல்லம், எர்ணாகுளம், திருச்சூர், ஷொர்ணூர், கோழிக்கோடு, காசரகோடு, மங்களூர்,  கோவா, மும்பை பன்வேல், கோட்டா, புதுடெல்லி வழியாக அமிர்தசரஸ்கு வாராந்திர ரயில் சேவை உள்ளது. அடுத்ததாக விசாகப்பட்டினத்தில் இருந்து புவனேஷ்வர் வழியாக ஒரு வாராந்திர ரயில் இயங்குகிறது. இந்திய வரைபடத்தில் பார்த்தால் நடு இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் என்ற இடத்திலிருந்து அமிர்தசரஸ் க்கு நேரடி ரயில் சேவை உள்ளது.

தென்மாவட்டங்களிலிருந்து ஏதேனும் ஒரு தினசரி ரயிலில் சென்னை சென்று விட்டு  அங்கு பகல் முழுவதும் நாய் போல் பயண சாமான்களுடன்  நடைமேடையில் காவல் கிடந்த விட்டு மாலை சென்னையிலிருந்து புதுடெல்லி செல்லும் இரண்டு தினசரி ரயில்களில் ஏதேனும் ஒரு ரயிலில் புதுடெல்லி சென்றுவிட்டு அங்கிருந்து அடுத்த ரயிலில் அமிர்தசரஸ் செல்ல வேண்டும்.

இவ்வாறு  மூன்று ரயில்களில் செல்வதற்கு ஏதேனும் ஒரு ரயிலில் முன்பதிவு இருக்கை இல்லை என்றால் பயணம் செய்ய முடியாது. அடுத்த தேர்வாக ஏதேனும் வாராந்திர ரயில்களில் பயணம் செய்ய வேண்டும். இது போன்ற ரயில்கள் சென்னையில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். தாம்பரத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு குடும்பத்துடன் பயணம் சாமான்களுடன் பயணம் செய்வது மிகவும் சிரமத்தை உண்டு பண்ணுகிறது.

சென்னை ரயில் கன்னியாகுமரி வரை நீட்டிப்பு: இதற்கு நிரந்தர தீர்வாக சென்னையிலிருந்து நிஜாமுதீனுக்கு இயக்கப்படும் 12611-12612 ரயிலை தாம்பரம், விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக  ஒருமுனை கன்னியாகுமரிக்கும் மறுமுனை அமிர்தசரஸ் க்கும் நீட்டித்து இயக்க செய்து இயக்க வேண்டும். இவ்வாறு நீட்டிப்பு செய்யும் போது தென்னிந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்கள் கன்னியாகுமரி - அமிர்தசரஸ் என்ற நேரடி ரயில் மூலம் இணைக்கப்பட்டு விடும்.

கால அட்டவணை: தற்போது இந்த ரயில் சென்னையிலிருந்து இயங்கும் சனிக்கிழமை காலை 6:00 மணி என்ற கால அட்டவணை மாற்றம் செய்யாமல் வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணிக்கு கன்னியாகுமரியிலிருந்து புறப்படும் சென்னைக்கு அதே சனிக்கிழமை காலை 6:00 மணிக்கு சென்றுவிட்டு நிஜாமுதீனுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணிக்கு சென்று அங்கிருந்து அமிர்தசரஸ் க்கு அதே ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 6:00 அளவில் சென்று சேரும். பின்னர் இந்த ரயிலின் பெட்டிகள் அங்கு இரண்டாம் கட்ட பராமரிப்பு  பணிகள் செய்துவிட்டு தோராயமாக திங்கள் காலை 7:00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டால் நிஜாமுதீனுக்கு தற்போது புறப்படும் திங்கள் மதியம் 3:35 மணிக்கு வந்து அதே கால அட்டவணையில் சென்னைக்கு செவ்வாய் இரவு 9.00 மணிக்கு வந்து அப்படியே புதன்கிழமை காலை 9.00 மணிக்கு கன்னியாகுமரி வருமாறு இயக்கலாம்.

பராமரிப்பு: இந்த ரயிலின் முதன்மை பராமரிப்பு நாகர்கோவிலில் செய்யப்பட வேண்டும். இந்த ரயில் வெள்ளிக்கிழமை மாலை புறப்படுவதால் வெள்ளிக்கிழமை அதிகாலையில் இருந்து மதியம் சுமார் 3:00 மணி வரை பராமரிப்பு செய்யப்பட வேண்டும். இதற்கு வெள்ளிக்கிழமை நாகர்கோவில் பிட்லைன் காலியாக இருந்தால் மட்டுமே இந்த ரயில்கள் நீட்டிப்பு செய்து கன்னியாகுமரியிலிருந்து இயக்க முடியும். 

ஒரு வேளை இந்த ரயில் நீட்டிப்பு செய்யும் பட்சத்தில் வெள்ளிக்கிழமை பிட் லைன் காலி இல்லை என்றால் இந்த ரயில் திருநெல்வேலியுடன் நிறுத்தப்படும். அப்போது அய்யோ குற்யோ என்று முறையிட்டு எந்த பயனும் இல்லை.

சென்னைக்கு ரயில்: கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு மதுரை, திருச்சி, சென்னை வழியாக இவ்வாறு இயக்கும் போது தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்ல ஒரு வாராந்திர ரயில் சேவை கிடைக்கும். இது நமது அனைத்து மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அதிக வருவாய்: கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து உள்ள நாகர்கோவில் ரயில் நிலையத்துக்கு அதிக வருவாய் கிடைக்க  வேண்டும் என்றால் இங்கிருந்து; மதுரை சென்னை மார்க்கமாக அதிக ரயில்கள் இயக்கப்பட வேண்டும். இவ்வாறு இயக்கினால் தான் அதிக வருவாய் கிடைக்கும். கடந்த ஆண்டு கன்னியாகுமரி – திப்ருகர் தினசரி ரயில் இயக்கப்பட்டது ஆனால் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களின் வருவாய் பெரிய அளவில் அதிகரிக்கவில்லை. ஆனால் இது போன்ற ரயில் மதுரை சென்னை வழியாக தினசரி ரயிலாக இயக்கப்பட்டிருந்தால் வருவாய் பலமடங்கு உயர்ந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இவ்வாறு அறிக்கைில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory