» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி விவிடி சந்திப்பு பகுதியில் மேம்பாலம் : நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
புதன் 4, செப்டம்பர் 2024 7:29:27 PM (IST)
தூத்துக்குடி விவிடி சந்திப்பு பகுதியில் மேம்பாலம் அமைப்பது தொடர்பாக நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ.வேலு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி விவிடி சிக்னலில் நெடுஞ்சாலைத்துறை மூலம் கட்டப்பட உள்ள மேம்பாலம் குறித்தும், தூத்துக்குடி இரயில்வே மேம்பாலம் அருகில் புதிய அனுகுசாலை அமைப்பது குறித்தும், மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு பணிகள் குறித்து பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் முன்னிலையில் இன்று (04.09.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தாவது: தூத்துக்குடியில் எதிர்பாராத விதத்தில் பெரிய மழை பெய்து அதன் விளைவாக பெருவெள்ளம் ஏற்பட்டு பெரும்சேதம் ஏற்பட்டது. அச்சேதத்தில் மறுசீரமைப்பு பணிக்காக 13 நாட்கள் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் தங்கி இருந்து பணியாற்றினேன்.
163 பணிகளுக்கு 140 கோடி பணம் நமது முதல்வர் அவர்களால் தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காக ஒதுக்கப்பட்டு முழுமையாக அப்பணிகள் முடிவடைந்தது. மேலும் 83 நிரந்தரப்பணிகளுக்கு 110 கோடி ஒதுக்கப்பட்டு அதில் 37 பணிகள் முடிவடைந்துள்ளது. இன்னும் 46 பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும. முடிவடையாத பணிகளில் ஒன்று ஏரல் மேம்பால பணியாகும். இப்பணிகள் செப்டம்பர் மாதம் முடிவடையும்.
தூத்துக்குடியில் இரயில்வே மேம்பாலம் மற்றும் விவிடி சிக்னல் சாலை இவ்விரண்டு சாலைப் பணிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பணியாகும். எனினும் நில எடுப்பு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள காரணத்தினால் காலதாமதம் ஏற்படுகிறது. இம்மாதம் 17ம் தேதி உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகிறது. மேற்படி வழக்கில் அரசுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கின்றோம். அதன்பிறகு தமிழக முதலமைச்சரிடம் அனுமதி பெற்று இப்பணிகள் தொடரும் என தெரிவித்தார்.
அந்தோணியார்புரம் அருகில் தூத்துக்குடி - திருநெல்வேலி நான்குவழிச்சாலையில் ஏற்பட்ட சேதத்தினை சீரமைக்க கோரியது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மண்டல அலுவலரிடம் மாவட்ட ஆட்சியர் மூலமாகவும், நெடுஞ்சாலைத்துறை அரசு செயலர் மூலமாகவும் ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆன்மிக நகரமான திருச்செந்தூருக்கு போக்குவரத்து செறிவு அதிகமாகவுள்ளதால் சாலை விரிவாக்கப்பணிக்கு முதலமைச்சர் சாலை திட்டத்தின் கீழ் வரைவு திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அத்திட்ட அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன் நில எடு;ப்பு செய்யவேண்டிய அவசியம் உள்ளதா என ஆராய்ந்து போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய சாலை பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
மேலும் முதலமைச்சர் எந்த ஒரு சாலையை அமைக்க வேண்டும் என்றாலும் 90 சதவீத நில எடுப்பு பணிகள் நிறைவடைந்த பின்னரே சாலை அமைக்க டெண்டர் கோர அறிவுரை வழங்கியுள்ளார். தூத்துக்குடி - மணியாச்சி இணைப்பு சாலையை சரிசெய்ய நில எடுப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர் இ;ச்சாலை திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படும் என தெரிவித்தார்.
ஆய்வின்போது நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு செயலாளர் டாக்டர்.செல்வராஜ், பொதுப்பணித்துறை அரசு செயலாளர் மன்கத் ராம் சர்மா, மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் செ.ஜெனிட்டா, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்றத்தலைவர் சரவணக்குமார், கோட்டப்பொறியாளர் (நெடுஞ்சாலைத்துறை) ஆறுமுக நயினார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.