» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம்: அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்!

சனி 31, ஆகஸ்ட் 2024 12:26:36 PM (IST)



கன்னியாகுமரி மாவட்டத்தில் நடமாடும் கால்நடை மருத்துவ வாகனத்தை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் கால்நடை விவசாயிகளின் பயன்பாட்டிற்கு அனுப்பி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நாகர்கோவில் மற்றும் தக்கலை வட்டம் கால்நடை விவசாயிகளின் பயன்பாட்டிற்காக நடமாடும் கால்நடை மருத்துவ வானத்தை அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் முன்னிலையில் இன்று (31.08.2024) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் கலந்து கொண்டு, நடமாடும் கால்நடை மருத்துவ வாகனத்தினை அனுப்பி வைத்து தெரிவிக்கையில்- தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற நாளிலிருந்து கால்நடை பராமரிப்புத்துறைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார்கள். அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையில் நாகர்கோவில் மற்றும் தக்கலை ஆகிய இரு கோட்டங்களில் ஒரு கால்நடை பன்முக மருத்துவமனை, 2 கால்நடை மருத்துவமனைகள், 49 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 15 கால்நடை கிளை நிலையங்கள் மூலம் கால்நடைகளுக்கு சிகிட்சைப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் கால்நடை நிலையங்களிலிருந்து தொலைத்தூரப்பகுதியிலுள்ள கிராமங்களில் கால்நடைகளுக்கு சிகிட்சை மற்றும் நலப்பணிகள் மேற்கொள்ள ஏதுவாக தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கால்நடை நலம் மற்றும் நோய் கட்டுப்பாட்டு பிரிவில் பெறப்பட்ட 245 வாகனங்களை கொண்டு கால்நடை நலப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 20.08.2024 அன்று நடமாடும் கால்நடை மருத்துவப்பணிக்கான வாகனங்களை அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கியதை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இரண்டு வாகனங்கள் பெறப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் முறையே நாகர்கோவில் மற்றும் தக்கலை கால்நடை பராமரிப்பு உதவி இயக்குநர் கோட்டங்களில் செயல்படுத்தப்படவுள்ளது. மேற்கண்ட நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்களில் ஒரு கால்நடை உதவி மருத்துவரும் ஒரு உதவியாளரும் பணியில் இருப்பார்கள். 

நடமாடும் கால்நடை மருத்துவ வாகனத்தில் TN09 G 3235 என்ற எண் கொண்ட வாகனம் இராஜாக்கமங்கலம் வட்டத்திற்குட்பட்ட தாராவிளை, காரவிளை கிராமங்களில் திங்கள்கிழமைகளிலும், வடலிவிளை, வண்டாவிளை கிராமங்களில் செவ்வாய் கிழமைகளிலும், தோவாளை வட்டத்திற்குட்பட்ட கோழிக்கோட்டுப் பொத்தை, இராமனாதிச்சன்புதூர் கிராமங்களில் புதன்கிழமைகளிலும், கீரிப்பாறை, வாட்ஸ்புரம் கிராமங்களில் வெள்ளி கிழமைகளிலும், புதுக்கிராமம். புளியன்விளை கிராமங்களில் சனிக்கிழமைகளிலும், அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட கனகப்பபுரம், விஜயநகரி கிராமங்களில் வியாழன்கிழமைகளிலும் கால்நடை நலப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

நடமாடும் கால்நடை மருத்துவ வாகனத்தில் TN 09 G 3237 என்ற எண் கொண்ட வாகனம் தக்கலை வட்டத்திற்குட்பட்ட ஆத்திவிளை, நுள்ளிவிளை கிராமங்களில் திங்கள்கிழமைகளிலும், குருந்தன்கோடு வட்டத்திற்குட்பட்ட தென்கரைதோப்பு, மேலபெருவிளை கிராமங்களில் செவ்வாய்கிழமைகளிலும், கிள்ளியூர் வட்டத்திற்குட்பட்ட கண்ணன்விளை, மாத்திரவிளை கிராமங்களில் புதன்கிழமைகளிலும், முஞ்சிரை வட்டத்திற்குட்பட்ட அடைக்காகுழி, பரக்காணி கிராமங்களில் வியாழன் கிழமைகளிலும், மேல்புரம் வட்டத்திற்குட்பட்ட சிலோன்காலனி, கணபதிகல் கிராமங்களில் வெள்ளிகிழமைகளிலும், திருவட்டார் வட்டத்திற்குட்பட்ட மணலோடை, குற்றியாறு கிராமங்களில் சனிக்கிழமைகளிலும் கால்நடை மருத்துவநலப்பணிகள் மேற்கொள்ள ஏதுவாக நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் இன்று முதல் துவக்கி வைக்கப்படுகிறது.

மேலும் திங்கள் முதல் சனி வரை கால்நடைகளுக்கான மருத்துவம் குடற்புழுநீக்கம் செயற்கை முறை கருவூட்டல் பணி, மலட்டுதன்மை நீக்கம் மற்றும் சிறுஅறுவைசிகிச்சைப்பணிகள் மற்றும் கால்நடை நலப்பணிகள் மேற்கொள்ளப்படும். நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்களை விவசாயிகள் அவசர கால்நடை சிகிச்சைக்காக 1962 என்ற எண்ணிலும் அழைத்து பயன்பெறலாம் என்று தெரிவித்தார். 

நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) மரு.இராதாகிருஷ்ணன், மண்டல தலைவர்கள் ஜவஹர், அகஸ்டினா கோகிலவாணி, தோவாளை ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பூதலிங்கம் பிள்ளை, இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் சரவணன், நகர்மன்ற உறுப்பினர்கள் விஜயன், விஜிலா ஜஸ்டின், அமலசெல்வன், துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory