» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

விவசாயிகளுக்கு மின்சாரத்தில் இயங்கும் புல் நறுக்கும் இயந்திரங்கள்: ஆட்சியர் வழங்கினார்!

திங்கள் 8, ஜூலை 2024 4:11:10 PM (IST)



குமரி மாவட்டத்தில் கால்நடை விவசாயிகளுக்கு மின்சாரத்தில் இயங்கும் புல் நறுக்கும் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் வழங்கினார்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கால்நடை விவசாயிகளுக்கு மின்சாரத்தில் இயங்கும் புல் நறுக்கும் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் வழங்கி தெரிவிக்கையில் "கால்நடை பராமரிப்பு பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் 2023-24-ன் கீழ் தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை மூலம் 50% மானியத்துடன் கூடிய மின்சாரத்தில் இயங்கும் "புல் நறுக்கும் கருவி (Chaff Cutter)" வழங்கும் திட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 10 எண்ணம் குறியீடு நிர்ணயிக்கப்பட்டு, ரூ. 1.60 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

அதனடிப்படையில் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு மின்சாரத்தில் இயங்கும் புல் நறுக்கும் கருவி வழங்கப்படுகிறது. ஒரு புல் நறுக்கும் கருவியின் விலை ரூ.30,750/- இதில் அரசு 50% மானியத் தொகையாக ரூ.15,375/-னை வழங்குகிறது. மீதமுள்ள 50% தொகை ரூ.15,375/- னை மட்டுமே பயனாளிகள் செலுத்த வேண்டும்.

மின்சாரத்தின் மூலம் இயங்கும் புல் நறுக்கும் கருவியானது தீவனப்பயிர்களை நுழைத்து, அதை சிறு துண்டுகளாக நறுக்கி கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கருவியை பயன்படுத்தி சோளத்தட்டு, சீமைபுல், கோ-4, மக்காச்சோளம் போன்ற தீவனங்களை வேகமாக நறுக்கி கால்நடைகளுக்கு தேவையான ஊறுகாய் புல் போன்றவற்றை தயாரித்துக்கொள்ள முடியும். மேலும் இந்த கருவியானது தென்னை மட்டை மற்றும் தீவனங்களை மிக விரைவாக வெட்டி தருகின்றது.

மின்சாரத்தினால் இயங்கும் புல் நறுக்கும் இயந்திரம் கைகளால் பயன்படுத்தும் வகையிலும், 2 குதிரைத் திறன் வரையில் மின்சார மோட்டாரினால் இயங்கக்கூடிய வகையிலும் தனித்தனியே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கருவியில் செங்குத்தாக வெட்டும் கத்தி உள்ளதால் அதிக அளவுள்ள தீவனங்களை விரைவாகவும், வேகமாகவும் வெட்டி தரும். இக்கருவியின் மூலம் தீவனத்தை மிகவும் சிறு சிறு துண்டுகளாக வெட்டி கால்நடைகளுக்கு உணவாக கொடுப்பதன் மூலம் கால்நடைகள் விரைவாக சாப்பிடுவதுடன், எளிதில் செரிமானமும் ஆகிவிடுகிறது. 

இந்த கருவியை பயன்படுத்தி தீவனங்கள் வீணாகாமலும், சேதாரமாகாமலும் வெட்ட முடியும். இக்கருவியை பயன்படுத்தி ஒரு மணி நேரத்தில் 400 கிலோ வரை உள்ள தீவன பயிர்களை வெட்ட முடியும். இந்த கருவியை எந்த இடத்திற்கும் எடுத்து செல்லும் வகையில் குறைவான எடையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தை பயன்படுத்தி தீவனத்தை வெட்டி கால்நடைகளுக்கு கொடுக்கும் போது பால் உற்பத்தியானது அதிகரிக்கும். எனவே கால்நடை விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடைய கேட்டுக்கொள்கிறேன். மேலும் விவரங்களுக்கு துறை சார்ந்த அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் 10 பயனாளிகளுக்கு மின்சாரத்தில் இயங்கும் புல் நறுக்கும் இயந்திரங்களை வழங்கினார்கள். நடைபெற்ற நிகழ்ச்சியில் மண்டல இணை இயக்குநர் (கால்நடை பாராமரிப்புத்துறை) மரு.இராதாகிருஷ்ணன், துணை இயக்குநர் (கூ/பொ) மரு.அ.சந்திரசேகர், உதவி இயக்குநர் மரு.சி.சுப்பிரமணியன், கால்நடை உதவி மருத்துவர்கள் மரு.சு.ராமேஷ், மரு.ஜே.லிடியா, மரு.அமுதவல்லி, மரு.மு.இசக்கிராஜன் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory