» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கோடை கால விளையாட்டு பயிற்சி நிறைவு விழா: ஆட்சியர் சான்றிதழ் வழங்கினார்
திங்கள் 13, மே 2024 3:11:48 PM (IST)
கோடை கால பயிற்சி முகாமிகளில் கலந்து கொண்டு மாணவ மாணவியர்கள் தங்களது விளையாட்டு திறனை வெளிப்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் அறிவுரை வழங்கினார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கன்னியாகுமரி மாவட்ட பிரிவு சார்பில் விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் 18 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கோடை கால பயிற்சி முகாம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் தொடர்ந்து நடைபெற்றது. முகாமின் இறுதிநாளான இன்று (13.05.2024) மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பேசுகையில்-
தமிழ்நாடு அரசு ஒவ்வொரு வருடமும் மாணவ மாணவியர்களின் விடுமுறையினை பயனுள்ளதாக ஆக்கும் வகையில் ஏப்ரல் மே மாதங்களில் கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம்களை நடத்தி வருகிறது. அதனடிப்படையில் தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் கன்னியாகுமரி மாவட்ட பிரிவின் சார்பில் கடந்த 29.04.2024 அன்று முதல் இன்று (13.05.2024) வரை தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி மற்றும் கைப்பந்து என 5 விளையாட்டிற்கான பயிற்சி தினசரி காலை 6.30 மணியிலிருந்து 8.30 மணிவரையும் மாலை 4.30 மணியிலிருந்து 6.30 மணிவரையும் அளிக்கப்பட்டது.
கோடைக்கால பயிற்சி முகாமில் மொத்தம் 449 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட மாணவ மாணவியர்களுக்கு தினமும் ஊட்டச்சத்து மிகுந்த பயிறு வகைகள், முட்டை மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது. பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்கள் இத்தோடு தங்களுடைய பயிற்சியினை முடித்து கொள்ளமால் உங்களுக்கு ஆர்வம் உள்ள விளையாட்டுகளில் பயிற்சி மேற்கொண்டு தங்களின் தனித்திறமையினை வெளிப்படுத்திட முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் தமிழ்நாடு அரசானது விளையாட்டு துறையில் தனிக்கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ மாணவியர்களுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டு, மாநில அளவில் சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வாய்ப்பினை மாணவ மாணவியர்கள் தகுந்த முறையில் விண்ணப்பித்து உங்களது தனித்திறமையினை வெளிக்கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் பேசினார்.
அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், அகஸ்தியா பொனுகு, விதாத் பொனுகு உட்பட கோடைக்கால பயிற்சி முகாமில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.