» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி மாவட்டத்தில் ரூ.2.58 கோடி மதிப்புள்ள நகை, பணம், பொருட்கள் பறிமுதல்!
செவ்வாய் 2, ஏப்ரல் 2024 3:50:11 PM (IST)
குமரி மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரொக்கம் ரூ.1.18 கோடி, மற்றும் ரூ.1,40 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு நாடாளுமன்ற பொதுத் தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதி ஒன்றுக்கு 3 எண்கள் பறக்கும் படைகள் வாரியாக பறக்கும் படைகள் 18 எண்களும், நிலையான கண்காணிப்பு படைகள் 18 எண்களும் கூடுதல் பறக்கும் படைகள் 36 எண்களும், கூடுதல் நிலையான கண்காணிப்பு படைகள் 36 எண்களும் இம்மாவட்டத்தில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், தேர்தல் நடத்தை விதிமீறல்களை தடுக்கவும், தேர்தல் நடத்தை விதிமீறல்களில் எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்படும் பணியிலும் இப்படைகள் செயல்பட்டு வருகிறது. இது தவிர 6 எண்கள் வீடியோ கண்காணிப்பு படைகளும் செயல்பட்டு வருகிறது.
மேற்படி பறக்கும் படை குழுவினரால் 01.04.2024 மு.ப. 6.00 மணி முதல் 02.04.2024 அன்று மு.ப 6.00 வரை ரூ.4,00,500/- ம் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரொக்கம் ரூ.1,18,30,427/- மற்றும் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட தங்கம், வெள்ளி பொருட்கள் மதிப்பு ரூ.1,40,00,000/- தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய வகையில் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் அச்சக முகவரி மற்றும் அனுமதியில்லாமல் அச்சடிக்கப்பட்ட பிரசுரங்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக தேர்தல் விதிமீறல் தொடர்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.