» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதிப்பு!

புதன் 2, ஜூலை 2025 5:14:15 PM (IST)

இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு, 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசு ஆட்சி செய்து வந்தது. இந்நிலையில், வங்கதேச விடுதலை போரில் ஈடுபட்டவர்களின் உறவினர்களுக்கு, அரசு வேலைகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில் வன்முறையாக வெடித்தது.

இந்த இடஒதுக்கீடு நடைமுறைக்கு முடிவு ஏற்படுத்த வலியுறுத்தி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மாதத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 500-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். இதனால், நாட்டில் பதற்ற நிலை ஏற்பட்டது. 

தீவிர போராட்டம் தொடர்ச்சியாக பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறினார். வங்கதேசத்தின் டாக்கா நகரில் இருந்து, சகோதரியுடன் ராணுவ விமானத்தில் புறப்பட்ட ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். அவரை வங்கதேசத்திடம் திரும்ப ஒப்படைக்கும்படி அந்நாட்டு அரசு இந்தியாவுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.

இந்நிலையில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றின் விசாரணை இன்று எடுத்து கொள்ளப்பட்டது. சர்வதேச குற்றங்களுக்கான விசாரணை அமைப்பின் நீதிபதி முகமது குலாம் மோர்டுஜா மஜும்தர் தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு இதனை விசாரித்தது. இதில், ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. 

இதேபோன்று, இதே வழக்கில் கோபிந்தகஞ்ச் பகுதியை சேர்ந்த ஷகீல் அகண்ட புல்புல் என்பவருக்கு 2 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் உள்ள முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, ஏதேனும் குற்ற செயல்களில் ஈடுபட்டு இருக்கிறார் என்றால், அவரை நாடு கடத்த வேண்டும். நீதியின் முன் அவரை கொண்டு வர வேண்டும் என வங்கதேச நாட்டின் இடைக்கால அரசின் தலைவரான பேராசிரியர் முகமது யூனுஸ் முன்பு கூறினார்.

ஹசீனாவுக்கு எதிராக 155 சட்ட வழக்குகள் பதிவாகி உள்ளன. இவற்றில் 136 வழக்குகள் படுகொலையுடன் தொடர்புடையவை. அவருக்கு எதிராக, 8 கொலை முயற்சி வழக்குகள், 3 கடத்தல் மற்றும் மனித குலத்திற்கு எதிரான மற்றும் இனப்படுகொலைகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக 7 வழக்குகளும் பதிவாகி உள்ளன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory