» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியா - பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியது அமெரிக்காவா? ஜெய்சங்கர் விளக்கம்!

வியாழன் 22, மே 2025 5:48:39 PM (IST)

இந்தியா - பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வந்த நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் கொடுத்துள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதன் கொள்கைகள் இன்னும் முடியவில்லை, அதன் ராணுவ நடவடிக்கைகள் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 

ஆறு நாள்கள் அரசுமுறைப் பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றிருக்கும் மத்திய அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், நெதர்லாந்து நாட்டின் ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில், இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டையை நிறுத்தி, தானே அமைதியைக் கொண்டு வந்ததாக டொனால்ட் டிரம்ப் கூறி வருவதை முற்றிலும் மறுத்திருக்கிறார்.

மேலும், உண்மையில் இந்த சண்டை நிறுத்தம் என்பது எவ்வாறு உண்டானது என்பதையும் விவரித்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் உண்டாகியிருந்த நிலையில், இரு நாடுகளும் பேசிக்கொள்ள ஒரு அமைப்பு இருந்தது. அப்படித்தான், மே 10ஆம் தேதி பாகிஸ்தான் ராணுவம் ஒரு தகவலை அனுப்பியது, அதில், தாக்குதலை நிறுத்த தயார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை ஏற்று நாங்களும் செயல்பட்டோம் என்று பதிலளித்துள்ளார்.

ஏப்ரல் 22 பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற அதிரடித் தாக்குதலை நடத்தியது இந்தியா. அதன் தொடர்ச்சியாக, சர்வதேச எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே சண்டை உருவானது. மூன்று நாள்களுக்குப் பிறகு சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. வர்த்தக நிலைப்பாட்டைக் காரணம் காட்டி இரு நாடுகளுக்கும் அழுத்தம் கொடுத்து சண்டை நிறுத்தத்தைக் கொண்டுவந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இதனை ஒரு முறை இரு முறையல்ல இதுவரை 8 முறை கூறிவிட்டார்.

ஆனால் பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதாலேயே சண்டை நிறுத்தம் ஏற்பட்டதாக இந்தியா கூறி வந்த நிலையில், நெதர்லாந்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விரிவான விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார்.

அதில், அமெரிக்கா, அது இருக்கும் இடத்திலேயேதான் இருந்தது. அமெரிக்க செயலர் என்னிடம் பேசினார், அமெரிக்க துணை அதிபர் வான்சே பிரதமர் மோடியுடன் பேசினார். பாகிஸ்தான் தரப்புடனும் அவர்கள் பேசினர். இதுபோல வேறு சில உலக நாடுகளும் எங்களிடம் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துமாறு கேட்டுக் கொண்டன.

ஆனால், சண்டை நிறுத்தம் ஏற்பட்டது என்னவோ இயற்கையான வழியில்தான், எப்போதும் இரு நாடுகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டால், பிற நாடுகள் தங்களது கவலையை வெளிப்படுத்தி, அமைதியை ஏற்படுத்த முயலும், ஆனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே நேரடியாகவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, சண்டை நிறுத்தம் கொண்டு வரப்பட்டது.

எங்களிடம் பேசிய உலக நாடுகள் அனைத்துக்கும் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திவிட்டோம், அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, அனைத்து நாடுகளுக்குமே சொன்னது ஒன்றைத்தான், சண்டையை நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் நினைத்தால், அதை நேரடியாக எங்களிடம் சொல்ல வேண்டும், அதனை அவர்களிடமிருந்து நாங்கள் நேரடியாகக் கேட்க வேண்டும், அதன்பிறகுதான் அந்நாட்டு ராணுவத் தளபதி, நமது நாட்டுத் தளபதியை தொடர்புகொண்டு கூறினார், பிறகு சண்டை நிறுத்தம் ஏற்பட்டது என்று மிகத் தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory