» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வாடிகனில் போப் 14-ம் லியோ பதவியேற்பு: புனித பீட்டர் சதுக்கத்தில் முதல் திருப்பலி நிறைவேற்றினார்!

திங்கள் 19, மே 2025 8:57:48 AM (IST)



வாடிகன் புனித பீட்டர் சதுக்கத்தில் போப் 14-ம் லியோ நேற்று பதவியேற்றார். பின்னர் புகழ்பெற்ற புனித பீட்டர் சதுக்கத்தில், தனது முதல் திருப்பலியை நிறைவேற்றினார்.

உலகம் முழுவதும் வாழும் 140 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புதிய தலைவராக, போப் 14-ம் லியோ (வயது 69) கடந்த 8-ந்தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவை சேர்ந்த இவர் நேற்று வாடிகனில் போப் ஆண்டவராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு போப் ஆண்டவருக்கான ‘பாலியம்’ (பட்டை) மற்றும் மீனவர் மோதிரம் அணிவிக்கப்பட்டது.

பின்னர் புகழ்பெற்ற புனித பீட்டர் சதுக்கத்தில், போப் ஆண்டவராக தனது முதல் திருப்பலியை நிறைவேற்றினார். திருப்பலியில் அவர் ஆற்றிய மறையுரையில் தனது போப் பணிக்காலத்தின் கருப்பொருளை வெளியிட்டார். அதாவது அன்பு, ஒற்றுமை ஆகிய இரட்டை பரிமாணங்கள் வழியாக ஒரு ஊழியராக திருச்சபையை வழிநடத்த விரும்புவதாக தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-நமது திருச்சபை ஒற்றுமை மற்றும் இணக்கத்தின் அடையாளமாக, ஒரு ஒன்றுபட்ட திருச்சபையாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது ஒரு சமரசமான உலகத்திற்கு அடிப்படையாக இருக்கும்.

இந்த நமது காலத்தில் வெறுப்பு, வன்முறை, பாரபட்சம், வேறுபாடு, பூமியின் வளங்களை சுரண்டுதல், ஏழைகளை ஓரங்கட்டுதல் போன்றவற்றால் அதிக அளவிலான முரண்பாடுகள் மற்றும் அதிக அளவிலான காயங்களை நாம் இன்னும் காண்கிறோம். கடவுளின் அன்பின் மீது நிறுவப்பட்ட ஒரு திருச்சபையை, ஒற்றுமையின் அடையாளமாக, உலகிற்கு தனது கரங்களைத் திறக்கும், வார்த்தையை அறிவிக்கும், மனிதகுலத்துக்கு நல்லிணக்கத்தின் அடிப்படையாக மாறும் ஒரு பணி திருச்சபையாக உருவாக்குவோம். இவ்வாறு போப் 14-ம் லியோ தெரிவித்தார்.

போப் 14-ம் லியோவின் இந்த திருப்பலியில் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ், பெரு நாட்டு ஜனாதிபதி டினா பொலுவார்ட், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷியா மந்திரி ஓல்கா லியுபிமோவா உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள், இளவரசர்கள், கார்டினல்கள், பிஷப்கள், பாதிரியார்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

மேலும் கிறிஸ்தவத்தின் வேறு பிரிவுகளை சேர்ந்த தலைவர்களும் கலந்து கொண்டனர். இதைப்போல பவுத்தம், முஸ்லிம், இந்து, சீக்கிய மற்றும் ஜெயின் உள்ளிட்ட பிற மதத்தலைவர்களும் போப் 14-ம் லியோவின் முதல் திருப்பலியில் கலந்து கொண்டனர். முன்னதாக பாரம்பரிய சடங்கான, புனித பீட்டர் சதுக்க அரங்கில் போப் ஆண்டவருக்கான சிறப்பு வாகனத்தில் பவனியாக சென்றதன் மூலம் போப் 14-ம் லியோ தனது போப் பதவியை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார்.

மிகவும் மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டே அந்த வாகனத்தில் இருந்து மக்களுக்கு ஆசி வழங்கினார். அப்போது வளாகத்தில் குவிந்திருந்தவர்கள் கரவொலி எழுப்பி போப் 14-ம் லியோவை வாழ்த்தினர். போப் 14-ம் லியோவின் முதலாவது திருப்பலியையொட்டி புனித பீட்டர் சதுக்கத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory