» செய்திகள் - விளையாட்டு » உலகம்

போர்களை முடிவுக்கு கொண்டு வர மத்தியஸ்தம்: புதிய போப் லியோ அறிவிப்பு!

புதன் 14, மே 2025 5:54:45 PM (IST)



உலகில் நடைபெறும் போர்களை முடிவுக்கு கொண்டு வர மத்தியஸ்தம் செய்ய தயார் என போப் பதினான்காம் லியோ தெரிவித்துள்ளார்.

முன்னாள் போப் பிரான்சிஸ் கடந்த ஏப். 21 ஆம் தேதியன்று உடல்நல குறைவினால் தனது 88 ஆம் வயதில் காலமானார். அவரது மறைவுக்கு பின்னர் கார்தினல்களின் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் புதிய போப் ஆக அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் ஃபிரான்சிஸ் ப்ரெவோஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

போப் பதினான்காம் லியோ என்று அழைக்கப்படும் அவர் கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவாகவும், வாடிகன் நகரத்தின் தலைவராகவும் வரும் மே 18 ஆம் தேதியன்று பதவியேற்கவுள்ளார். வாடிகனிலிருந்து மக்களுக்கு அவர் ஆற்றிய முதல் உரையிலிருந்தே, உலக அமைதியை நிலைநாட்டவும், போர்களை முடிவுக்கு கொண்டு வருவதைப் பற்றியும் அவர் வலியுறுத்தி வருகின்றார்.

இந்நிலையில், கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு, இந்தியா, ஆப்பிரிக்காவின் சில பகுதிகள் ஆகிய இடங்களிலுள்ள கிழக்கு கத்தோலிக்க தேவாலயங்களின் புனித ஜுபிலி ஆண்டிற்கான முன் ஏற்பாட்டு நிகழ்ச்சி இன்று (மே 14) நடைபெற்றது. அப்போது, பேசிய போப் பதினான்காம் லியோ போரில் ஈடுபட்டுள்ள நாடுகளின் தலைவர்களுக்கு இடையில் மத்தியஸ்தம் செய்ய தான் முன்வருவதாகக் கூறியுள்ளார்.

மேலும், மத்திய கிழக்கிலுள்ள கிறுஸ்துவ மக்கள் தங்களது தாயகத்திலிருந்து இடம்பெயர வேண்டாம் எனக் கூறிய அவர் ‘வன்முறைகளுக்கு இடையில் உங்களைத் தவிர வேறு யாரால் அமைதியை நிலைநிறுத்த முடியும்’ எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது: உக்ரைன், லெபனான் முதல் சிரியா வரை, மத்திய கிழக்கிலிருந்து திக்ரே மற்றும் கௌகாசஸ் ஆகிய பிரதேசங்கள் வரையில் வன்முறைகள் அதிகரித்துள்ளதை நாம் பார்க்கலாம். உலக அமைதிக்காக நீங்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும். உலக அமைதி நிலைக்க, என்னுடைய பங்கிற்கு என்னால் முடிந்த அனைத்தையும் நான் செய்வேன்.

எதிராளிகள் நேருக்கு நேராக வந்து ஒருவருக்கு ஒருவர் பேசுவதற்கு இந்தப் புனித பேராலயம் எப்போதும் தயாராகவுள்ளது. அதன்மூலம், மக்கள் நம்பிக்கை பெறுவார்கள். என அவர் பேசியுள்ளார். மேலும், மத்திய கிழக்கு மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகிய பகுதிகளிலுள்ள கிறுஸ்தவர்கள் தங்களது தாயகத்தைவிட்டு வெளியேறாமல் அங்கேயே நிலைத்திருக்க தான் பிரார்த்தனை செய்வதாகவும் போப் பதினான்காம் லியோ கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory