» செய்திகள் - விளையாட்டு » உலகம்
கனடா தேர்தலில் காலிஸ்தான் தலைவர் படுதோல்வி: கட்சி அந்தஸ்தும் பறிபோனது!
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 5:42:46 PM (IST)
கனடா பொதுத் தேர்தலில் காலிஸ்தான் ஆதரவாளரான ஜக்மீத் சிங் படுதோல்வி அடைந்துள்ளார்.

கனடா பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன், இந்திய நேரப்படி இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில், ஆளும் லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மீண்டும் அக்கட்சியின் தலைவர் மார்க் கார்னி பிரதமராக பொறுப்பேற்கவுள்ளார்.
இந்த நிலையில், வெறும் 7 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள புதிய ஜனநாயகக் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. பர்னபி சென்ட்ரல் தொகுதியில் போட்டியிட்ட கட்சித் தலைவர் ஜக்மீத் சிங், வெறும் 9,100 வாக்குகள் மட்டுமே பெற்று மூன்றாவது இடத்தை பிடித்து தோல்வியை தழுவியுள்ளார்.
காலிஸ்தான் தலைவராக முன்னிறுத்தப்பட்ட ஜக்மீத் சிங், தனது தொகுதியிலேயே தோல்வி அடைந்திருப்பது புதிய ஜனநாயகக் கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொத்தமுள்ள 343 இடங்களில் குறைந்தது 12 தொகுதிகளில் வெற்றிபெற்றால் மட்டுமே கட்சி அந்தஸ்து கிடைக்கும். இதனால், கட்சி அந்தஸ்தும் பறிபோகியுள்ளது. கடந்த தேர்தலில் 24 இடங்களில் வெற்றி பெற்ற புதிய ஜனநாயகக் கட்சி, ஆளும் லிபரல் கட்சிக்கு ஆதரவளித்திருந்தது.
இந்த நிலையில், தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதாக ஜக்மீத் சிங் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில்,"புதிய ஜனநாயகக் கட்சியை வழிநடத்தியதும் பர்னபி சென்ட்ரல் தொகுதி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியதும் என் வாழ்க்கையின் மிகப் பெரிய மரியாதையாக கருதுகிறேன்.
பிரதமர் மார்க் கார்னிக்கு வாழ்த்துகள். இந்த இரவு புதிய ஜனநாயகக் கட்சியினருக்கும் ஏமாற்றமளித்திருக்கும் என்பதை நான் அறிவேன். அதிக இடங்களை வெல்ல முடியாதது எனக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. கட்சி மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நாம் எப்போதும் பயத்தைவிட நம்பிக்கையைத் தேர்ந்தெடுப்போம் என்பது எனக்குத் தெரியும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நிஜ்ஜாா் கொலை தொடா்பாக இந்தியா மீது கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியதால் இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. அப்போது, நிஜ்ஜாா் கொலை செய்யப்பட்டதில் இந்தியாவுக்கு தொடா்பு உள்ளதற்கு வலுவான ஆதாரம் உள்ளதாக கடுமையான குற்றச்சாட்டை ஆளும் கூட்டணிக் கட்சியின் எம்.பி.யான ஜக்மீத் சிங் முன்வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதனிடையே, பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக ஜஸ்டின் செயல்படுவதால் லிபரல் கட்சிக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கடந்தாண்டு ஜக்மீத் சிங் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசாவில் செலவினங்களை குறைக்க 2ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்? டிரம்ப் அதிரடி முடிவு!
வெள்ளி 11, ஜூலை 2025 10:30:06 AM (IST)

நிதி நிறுவனத்தின் ஆலோசகராக மீண்டும் பணிக்கு திரும்பினார் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்!
புதன் 9, ஜூலை 2025 4:33:30 PM (IST)

பிரிக்ஸ் நாடுகள் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும் : அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!
புதன் 9, ஜூலை 2025 12:42:07 PM (IST)

விசா இல்லாமல் பயணிக்க 74 புதிய நாடுகளுக்கு சீனா அனுமதி : பட்டியலில் இந்தியா இல்லை!!
புதன் 9, ஜூலை 2025 11:45:34 AM (IST)

நெதன்யாகுவை கைது செய்ய வேண்டும்: நியூயார்க் மேயர் பேச்சுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டனம்!
செவ்வாய் 8, ஜூலை 2025 12:31:45 PM (IST)

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புகளுக்கு பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்புகண்டனம்
திங்கள் 7, ஜூலை 2025 5:20:18 PM (IST)
