» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்க வெளியேறியது : அதிபர் டிரம்ப் அறிவிப்பு
செவ்வாய் 21, ஜனவரி 2025 11:09:50 AM (IST)
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் நேற்று பதவியேற்றார். பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக 2வது முறையாக அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.
அமெரிக்காவில் கடந்த 2024 நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் அமோக வெற்றி பெற்றார். அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் ஜனவரி 20-ம் தேதி பதவி ஏற்பது வழக்கம். அதன்படி, பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது.
பதவியேற்ற பிறகு, அதிபர் ட்ரம்ப் உணர்ச்சி பொங்க உரையாற்றினார். அடுத்த 4 ஆண்டுகளில் அவர் மேற்கொள்ள உள்ள திட்டங்களை அறிவித்தார். அதிபர் பதவியில் இருந்து வெளியேறும் ஜோ பைடன், துணை அதிபர் பதவியில் இருந்து வெளியேறும் கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர்கள் பில் கிளின்டன், ஜார்ஜ் டபிள்யூ புஷ், பராக் ஒபாமா ஆகியோரும் பங்கேற்றனர். அமெரிக்க தொழிலதிபர்கள் எலான் மஸ்க், ஜெப் பெசாஸ், மார்க் ஜூகர்பெர்க், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை மற்றும் முகேஷ் அம்பானி உட்பட பலரும் விழாவில் கலந்துகொண்டனர்.
சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள புவிவெப்பமயமாதலை கட்டுப் படுத்த உலக நாடுகள் முயற்சி எடுத்து வருகின்றன. புவிவெப்ப மயமாதலை 2 டிகிரி செல்சியசுக்கு மிகாமல் கட்டுப்படுத்து வதற்கான பருநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கடந்த 2015-ம் ஆண்டு பாரிஸில் நடந்த கூட்டத்தின்போது எட்டப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தில் முதலில் இணைந்த அமெரிக்கா, டிரம்ப் ஆட்சி காலத்தின் போது விலகுவதாக அறிவித்தது. வளரும் நாடுகளுக்கு ஆதரவாக இந்த ஒப்பந்தம் இருப்பதாக விமர்சித்து வந்த டிரம்ப், பருவ நிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த சூழலில் அடுத்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை இரண்டாவது முறையாக விலக்கிக் கொள்வதற்கான உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார். இதைத் தொடர்ந்து, காலநிலை மாற்றத்திற்கு காரணமான பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் 2015-ம் ஆண்டு ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கான தனது நோக்கத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிவித்து, டொனால்டு டிரம்ப் ஒரு முறையான கடிதத்தில் கையெழுத்திட்டார்.