» செய்திகள் - விளையாட்டு » உலகம்
உக்ரைனில் தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷியா: 140 ஏவுகணைகள் இடைமறித்து அழிப்பு!
திங்கள் 18, நவம்பர் 2024 8:43:41 AM (IST)
உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா தீவிரப்படுத்தியது. கடந்த 24 மணி நேரத்தில் 140-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை உக்ரைன் இடைமறித்து அழித்தது.
உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் உக்ரைன் இணைய முயன்று வருகிறது. இதனால் தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ரஷியா எச்சரித்தது. ஆனால் இந்த முயற்சியை கைவிடாததால் உக்ரைன் மீது 2022-ம் ஆண்டு ரஷியா போர் தொடுத்தது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் சப்ளை செய்கின்றன.
அவற்றின் உதவியால் உக்ரைன் இன்னும் போரில் தாக்குப்பிடித்து நிற்கிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் இந்த போர் தற்போது 1,000 நாளை எட்டியது. இதில் உக்ரைன் தரப்பில் இதுவரை சுமார் 11 ஆயிரத்து 700 பேர் பலியானதாக ஐ.நா. அறிக்கை தெரிவித்துள்ளது. எனவே இந்த போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன. எனினும் போர் முடிந்தபாடில்லை.
அதற்கு மாறாக உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா மேலும் தீவிரப்படுத்தி உள்ளது. அதன்படி கடந்த ஒரு நாளில் உக்ரைன் மீது 120 ஏவுகணைகள் மற்றும் 90 டிரோன் தாக்குதலை நடத்தியது. இது சமீபத்தில் உக்ரைன் மீது நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதல் ஆகும்.
எனினும் அவற்றில் 140-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை உக்ரைன் வான்பாதுகாப்பு படையினர் இடைமறித்து சுட்டு வீழ்த்தினர். எனவே உக்ரைனில் உள்ள பொதுமக்கள் உயிருக்கு பயந்து ரெயில் நிலையங்கள், சுரங்கப்பாதைகள் போன்ற இடங்களில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அங்கு போர்ப்பதற்றம் மேலும் தீவிரம் அடைந்துள்ளது.