» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

செங்கோட்டையில் 80-வது சுதந்திர தின விழா: முதன்முறையாக ஒலிக்கிறது வந்தே மாதரம்!

செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 11:53:50 AM (IST)

REdfortu.jpg

இந்தியாவின் 80-வது சுதந்திர தினவிழாவில் 'வந்தே மாதரம்' தேசிய பாடல் உருவாக்கப்பட்டதன் 150-வது ஆண்டைக் கொண்டாடும் வகையில், வரலாற்றிலேயே முதன்முறையாக செங்கோட்டை மேடையில் இப்பாடல் முழுமையாகப் பாடப்படவுள்ளது.

இந்தியாவின் 80-வது சுதந்திர தினவிழா ஆகஸ்ட் 15, 2026 அன்று டெல்லி செங்கோட்டையில் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளைப் பாதுகாப்பு அமைச்சகம் தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில், இவ்வாண்டு சுதந்திர தின விழாவில் பல வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றங்களும் புதிய அம்சங்களும் இடம்பெறவுள்ளன.

பங்கிம் சந்திர சட்டோபாத்யாயால் இயற்றப்பட்டு, இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு எழுச்சியூட்டிய 'வந்தே மாதரம்' தேசிய பாடல் உருவாக்கப்பட்டதன் 150-வது ஆண்டைக் கொண்டாடும் வகையில், வரலாற்றிலேயே முதன்முறையாக செங்கோட்டை மேடையில் இப்பாடல் முழுமையாகப் பாடப்படவுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டைக்கு வருகை தந்தவுடன் 'வந்தே மாதரம்' பாடல் இசைக்கப்படும். அதைத் தொடர்ந்து அவர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். உரைக்குப் பின் என்.சி.சி. மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து மீண்டும் வந்தே மாதரம் பாடலையும், தொடர்ந்து தேசிய கீதத்தையும் பாடுவர்.

இந்த ஆண்டின் முக்கியக் கருப்பொருளாக 'வந்தே மாதரம் 150 ஆண்டுகள்' மற்றும் 'விகசித் பாரத் 2047-க்கான யுவ சக்தி' ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இந்திய விமானப்படையின் Mi-17 ஹெலிகாப்டர் 'வந்தே மாதரம் 150' என்ற பதாகையை ஏந்தி வந்து, விழா மைதானத்தில் உள்ள மக்கள் மீது பூக்களைத் தூவும். செங்கோட்டைக்கு எதிரே உள்ள ஞான்பாத் பகுதியில் 2,500 தேசிய மாணவர் படை மற்றும் 'மை பாரத்' தன்னார்வலர்கள் 'வந்தே மாதரம்' என்ற வார்த்தை வடிவில் நின்று சிறப்பிப்பர். வருகை தருபவர்கள் அனைவரும் உடன் சேர்ந்து பாடும் வகையில், அழைப்பிதழில் வந்தே மாதரம் பாடலின் வரிகள் முழுமையாக அச்சிடப்பட்டுள்ளன.

மேலும், 'சேவா தீர்த்தம்' மற்றும் 'தர்ம சக்கரம்' படங்களும் அழைப்பிதழில் இடம்பெற்றுள்ளன. வி.ஐ.பி. கலாச்சாரத்தைக் குறைக்கவும், நீர் வளப் பாதுகாப்பை வலியுறுத்தவும், விருந்தினர்கள் அமரும் பகுதிகள் இந்தியாவின் முக்கிய ஏரிகளின் பெயர்களால் அழைக்கப்படுகின்றன.

சர்வதேச கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஒலிம்பியாட் 2026 போட்டிகளில் பதக்கம் வென்ற 19 மாணவர்கள் சிறப்பு விருந்தினர்களாக முதன்மை மேடையில் அமர வைக்கப்படுகின்றனர். இவர்களுடன் இளம் தொழில்முனைவோர்கள், 'ஸ்டார்ட்-அப்' அமைப்பாளர்கள், விவசாயிகள், கைவினைஞர்கள் உட்பட சுமார் 5,000 சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கின்றனர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் ஆகஸ்ட் 8 முதல் 15 வரை 343 இடங்களில் முப்படை மற்றும் பாதுகாப்புப் படைகளின் இசைக்குழுக்களின் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory