» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு கண்டனம்: எதிர்க்கட்சிகள் தொடர் அமளி!
திங்கள் 9, பிப்ரவரி 2026 5:30:31 PM (IST)
ராகுல் காந்தியை பேச அனுமதிக்கக் கோரி மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், கடந்த மாதம் 28ம் தேதி ஜனாதிபதி உரையுடன் துவங்கியது. இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் அரசின் சாதனைகள், எதிர்கால திட்டங்களை விளக்கி, ஜனாதிபதி முர்மு உரையாற்றினார். ஜனாதிபதி உரையின் போதே, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, பிப். 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த நாட்களில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது. அந்த விவாதத்தை ஆக்கப்பூர்வமாக நடத்த விடாமல், பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி, காங்கிரஸ், திமுக, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன் உச்சமாக, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி உள்ளிட்டோர், பிரதமரின் இருக்கை அருகே சென்று அவரை நோக்கி கோஷமிட்டனர்.
மக்களவையில் பிரதமர் மீது எம்.பி.,க்கள் சிலர் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம், பிரதமரின் உரை இடம் பெறாமலேயே மக்களவையில் நிறைவேறியது. மக்களவை நேரத்தை எதிர்க்கட்சி எம்பிக்கள் வீணடித்து வருவதாக சபாநாயகர் ஓம்பிர்லா அதிருப்தி தெரிவித்து இருந்தார்.
இந்த சூழலில் மக்களவை கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியவுடன் யு-19 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு அவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கவிருந்த நிலையில், இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், பகல் 12 மணி வரை அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. அவைத் தலைமைப் பொறுப்பில் இருந்த சந்தியா ராய் தலைமையில் அவை மீண்டும் 2 மணிக்கு கூடியது. அப்போது, பட்ஜெட் குறித்து பேச காங்கிரஸ் எம்.பி சசி தரூருக்கு சந்தியா ராய் அழைப்பு விடுத்தார். சிறிது நேரம் பேசிய சசி தரூர், ராகுல் காந்திக்கு தனது வாய்ப்பை வழங்கினார்.
அப்போது பேசிய ராகுல் காந்தி, தான் சபாநாயகரிடம் சென்றதாகவும், அவையில் பேச சபாநாயகர் ஒப்புக்கொண்டதாகவும் கூறினார். ஆனால், அவையில் பேச ராகுல் காந்திக்கு சபாநாயகர் அனுமதி அளிப்பதாக உறுதி அளிக்கவில்லை என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். இதையடுத்து, அவையில் அமளி ஏற்பட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி வதேரா, ‘‘நாங்கள் சபைக்குச் சென்றுவிட்டு சும்மா வெளியே வருகிறோம். இது மிகவும் வருத்தம் அளிப்பதாக உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதற்கு ஒரு நிமிடம் கூட அனுமதி அளிக்கப்படவில்லை. இது கேலிக்கூத்தானது. இது ஜனநாயகம் அல்ல. நாங்கள் எதற்காக இங்கு வருகிறோம்? அவரைப் பேச அனுமதிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அனைத்து மாநிலங்களிலும் 50% தொகுதிகள் உயர்வு: மக்களவையில் மத்திய அமைச்சர் உறுதி!
வியாழன் 16, ஏப்ரல் 2026 5:12:22 PM (IST)

பெண்கள் இட ஒதுக்கீட்டைச் சீர்குலைக்க திமுக முயற்சி - தேஜஸ்வி சூர்யா குற்றச்சாட்டு
வியாழன் 16, ஏப்ரல் 2026 4:12:41 PM (IST)

ஆந்திராவில் கோர விபத்தில் 8 பக்தர்கள் பலி: பிரதமர் மோடி இரங்கல் - நிதியுதவி அறிவிப்பு
வியாழன் 16, ஏப்ரல் 2026 10:21:14 AM (IST)

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: தேசிய அளவில் 93.7% பேர் தேர்ச்சி!
வியாழன் 16, ஏப்ரல் 2026 8:37:11 AM (IST)

வேதாந்தா மின் உற்பத்தி நிலையத்தில் பாய்லர் வெடித்து 10 பேர் பலி; 40 பேர் படுகாயம்!
புதன் 15, ஏப்ரல் 2026 12:12:11 PM (IST)

குடியரசுத் துணைத் தலைவர் இல்லத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா: பிரதமர் மோடி பங்கேற்பு!
புதன் 15, ஏப்ரல் 2026 12:08:02 PM (IST)

