» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அமைச்சர் பதவி வேண்டுமா? ஜாமீன் வேண்டுமா? செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கெடு!

புதன் 23, ஏப்ரல் 2025 5:38:19 PM (IST)

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வேண்டுமா? அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா? என்பதை வரும் 28-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. 

பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். அடுத்த சில நாட்களில் மின்துறை அமைச்சர் பொறுப்பு மீண்டும் அவருக்கு வழங்கப்பட்டது. 

இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதான லஞ்ச வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம்விசாரித்து வருகிறது. இதனையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி சாட்சிகளை கலைக்க முற்படுகிறார் என்று அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வக்கீல் வாதிட்டார். இதனையடுத்து செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வக்கீல், சாட்சிகளை கலைப்பார் என அச்சம் இருப்பின் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என வாதிட்டார். இதை நீதிபதிகள் நிராகரித்தனர்.

பின்னர் நீதிபதிகள், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியபோது அமைச்சராக பதவி ஏற்க அனுமதி தரவில்லை. மெரிட் அடிப்படையில் ஜாமீன் வழங்கவில்லை. அரசியல் சாசன பிரிவு 21ஐ மீறிய காரணத்தால் ஜாமின் வழங்கப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கிய இரு நாள்களுக்குள் அமைச்சராகி இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது. அமைச்சராக இல்லை என்பதாலே செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்குவதை பரிசீலித்தோம். 

அரசியல்வாதிகள் எதிர்காலத்தில் ஜாமின் கோரினால் நீதிமன்றங்கள் என்ன முடிவு எடுக்கும்? என கேள்வி எழுப்பினர். இறுதியில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வேண்டுமா? அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா? என்பதை வரும் திங்கட்கிழமை (28-ம் தேதி) தெரிவிக்க அவகாசம் அளித்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory