» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதில் மத்திய அரசுக்கு விருப்பமில்லை: காங்கிரஸ்

புதன் 2, ஏப்ரல் 2025 12:09:49 PM (IST)

மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதில் மத்திய அரசுக்கு விருப்பமில்லை. இது மிகத் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது. 

மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது எதிா்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தேசிய தலைவருமான மல்லிகாா்ஜுன காா்கே இன்று பேசியதாவது: கடந்த 1881-ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பை இந்தியா நடத்தி வந்தது. இரண்டாம் உலகப் போா், இந்தியா-பாகிஸ்தான் போா் மற்றும் அவசரநிலை நேரங்களிலும்கூட மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 1931-இல் வழக்கமான மக்கள்தொகை கணக்கெடுப்புடன், ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்பட்டது.

1931 மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பாக அதுகுறித்து கருத்து தெரிவித்த மகாத்மா காந்தி, ‘நாம் உடல்நலப் பரிசோதனையை அவ்வப்போது மேற்கொள்வது போன்று, தேசத்தின் நலனையும் பரிசோதிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு முக்கியமானது’ என்று குறிப்பிட்டாா்.

நாட்டின் மக்கள்தொகை பெருக்கத்தை மட்டுமின்றி, வேலைவாய்ப்பு, குடும்ப கட்டமைப்பு, சமூக-பொருளாதார நிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அறிந்துகொள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு முக்கியமானது.

ஆனால், துரதிருஷ்டவசமாக இதுவரை இல்லாத வகையில் மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு தாமதம் செய்து வருகிறது. இதனால், மிகப் பெரிய எண்ணிக்கையிலான மக்கல் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனா்.

நாட்டில் எஸ்.சி., எஸ்.டி. சமூகத்தினரின் கணக்கெடுப்பை அரசு ஏற்கெனவே சேகரித்துள்ள நிலையில், மக்கள்தொகை கணக்கெடுப்புடன் பிற சமூகத்தினா் குறித்த ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்துவது சாத்தியமானதே. ஆனால், இதுகுறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மத்திய அரசு மெளனமாக இருந்து வருகிறது. கரோனா பாதிப்புக்கு இடையே, உலகில் 81 சதவீத நாடுகள் மக்கள்தொகை கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளன.

ஆனால், மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு மத்திய அரசு இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ. 575 கோடியை மட்டும் ஒதுக்கியுள்ளது. இது, மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதில் மத்திய அரசுக்கு விருப்பமில்லை என்பதையே காட்டுகிறது. இதைத் தொடா்ந்து தாமதிப்பது மிகத் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தும். துல்லியமான புள்ளி விவரங்கள் இன்றி கொள்கைகளை அரசு வகுப்பது தன்னிச்சையானதாகவும் பயனற்ாகவும் அமையும். எனவே, மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும் என்றாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory