» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
டெல்லி வீட்டில் கைப்பற்றப்பட்ட பணத்துக்கும் எனக்கும் தொடர்பு இல்லை : நீதிபதி விளக்கம்
திங்கள் 24, மார்ச் 2025 8:50:46 AM (IST)

டெல்லியில் உள்ள வீட்டில் கோடிக்கணக்கில் கைப்பற்றப்பட்ட பணத்துக்கும் எனக்கும் தொடர்பு இல்லை என்று உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளார்.
டெல்லி ஐகோர்ட்டு நீதிபதியாக இருப்பவர் யஷ்வந்த் வர்மா. டெல்லியில் உள்ள இவரது வீட்டில் கடந்த 14-ந் தேதி ஹோலி பண்டிகையன்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. அப்போது, ஊழியர்கள் குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள ஒரு அறையில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் தீயில் எரிந்த நிலையில் சிக்கியதாக தகவல் வெளியானது.
இந்த தகவல் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் ஐகோர்ட்டுக்கு மாற்ற பரிந்துரை முன்மொழியப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, டெல்லி தீயணைப்பு துறை தலைவர் அதுல் கார்க் கடந்த 21-ந் தேதி பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது: 14-ந் தேதி இரவு, நீதிபதி யஷ்வந்த் சர்மா வீட்டில் தீப்பிடித்த தகவல், கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்தது. உடனே 2 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
தீயை அணைத்து முடித்தவுடன், போலீசுக்கு தகவல் தெரிவித்துவிட்டு, தீயணைப்பு படையினர் வெளியேறினர். தீயணைப்பு பணியின்போது, அவர்கள் பணம் எதுவும் பார்க்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
ஆனால், டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா நடத்திய விசாரணை அறிக்கையில், டெல்லி தீயணைப்பு துறைக்கு தனியாக தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மட்டுமே நீதிபதியின் தனி செயலாளர் தகவல் தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இது, முரண்பாடாக உள்ளது.
டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி உபாத்யாயா தனது அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் சமர்ப்பித்துள்ளார். அதனுடன் டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா பகிர்ந்த ஒரு வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது.
விசாரணை அறிக்கையுடன் அந்த வீடியோவும் சுப்ரீம் கோர்ட்டிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த வீடியோவை சுப்ரீம் கோர்ட்டு தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
அதில், ஒரு அறையில், சில பொருட்கள் மீது எரியும் தீயை தீயணைப்பு வீரர்கள் அணைக்கும் வீடியோ இடம்பெற்றுள்ளது. ரூபாய் நோட்டு கட்டுகள் அரைகுறையாக எரிந்திருப்பது தெளிவாக தெரிகிறது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், பணம் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற டெல்லி தீயணைப்பு துறை தலைவரின் பேட்டி மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி தனது அறிக்கையில், 4 அல்லது 5 சாக்குகள் நிறைய பணம் இருந்தது தெரிய வந்ததாகவும், இது ஆழ்ந்த விசாரணைக்கு உரியது என்றும் கூறியுள்ளார்.
நீதிபதி வர்மா மீதான குற்றச்சாட்டுகளை சுப்ரீம் கோர்ட்டு கவனத்தில் கொண்டுள்ளது. அவர் மீது உள்மட்ட விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவை தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமைத்துள்ளார். வர்மாவுக்கு எந்த நீதிமன்ற அலுவலும் ஒப்படைக்க வேண்டாம் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், நீதிபதி வர்மாவிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. அவர் தனது விளக்கத்தை டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி உபாத்யாயாவிடம் சமர்ப்பித்துள்ளார். அதில், நீதிபதி வர்மா கூறியிருப்பதாவது: பணம் தீயில் எரிந்ததாக கூறப்படும் அறை, எனது பிரதான இல்லத்தை சேர்ந்தது அல்ல. ஊழியர்கள் குடியிருப்பு அருகே பழைய பொருட்கள் வைக்கும் அறை. அங்கு பயனில்லாத பொருட்களை வைப்பது வழக்கம்.
அங்கு ஊழியர்களும், வெளியில் இருந்து வருபவர்களும் எளிதாக சென்று வருவார்கள். அந்த அறை எப்போதும் திறந்தே கிடக்கும். அந்த அறையில் நானோ, என் குடும்பத்தினரோ பணம் எதுவும் வைக்கவில்லை. அங்கு பணம் இருந்ததா என்றும் எங்களுக்கு தெரியாது. எல்லோரும் வந்து செல்லும், எப்போதும் திறந்து கிடக்கும் அறையில் யாராவது பணம் வைப்பார்களா என்று கேட்க விரும்புகிறேன்.
தீவிபத்து நடந்த நாளில், நானும், என் மனைவியும் மத்தியபிரதேசத்தில் சுற்றுப்பயணத்தில் இருந்தோம். வீட்டில் என் மகளும், வயதான தாயாரும் மட்டும் இருந்தனர். 15-ந் தேதி மாலையில்தான் நானும், என் மனைவியும் திரும்பி வந்தோம். தீவிபத்து நடந்த நேரத்தில், தீயணைப்பு படையினர் வந்தபோது, பாதுகாப்பு கருதி, யாரையும் நெருங்கவிடவில்லை. தீயை அணைத்து முடித்த பிறகு, எங்கள் குடும்பத்தினரிடமோ, ஊழியர்களிடமோ பணம் எதையும் காட்டவில்லை.
தீயை அணைத்து முடித்த பிறகு, என் வீட்டில் இருந்தவர்கள் அந்த இடத்தை பார்த்தபோது அங்கு பணம் எதுவும் இல்லை. பணத்தை எனது ஊழியர்கள் அப்புறப்படுத்தவில்லை. அப்படி அப்புறப்படுத்திய சம்பவம் நடந்ததா என்றும் தெரியாது.
15-ந் தேதி மாலை, நான் வீடு திரும்பியபோது உங்களிடம் (தலைமை நீதிபதி) இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. போலீஸ் அதிகாரிகளை ஆய்வு செய்ய அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டீர்கள். நானும் அனுமதித்தேன். அந்த அறையை பார்த்தபோது, அங்கு பணம் இல்லை. எந்த நிலையிலும் பணம் காணப்படவில்லை.
மறுநாள், கோர்ட்டு தொடங்குவதற்கு முன்பு நாம் சந்தித்தோம். அப்போது, எனக்கு ஒரு வீடியோவை காட்டினீர்கள். அதில், எரிந்த அறையில் காணப்படாத காட்சிகள் எல்லாம் இருந்தன. எனவே, அறையில் கோடிக்கணக்கில் பணம் இருந்ததாக வெளியான தகவல்கள் அனைத்தும் எனது நற்பெயரை களங்கப்படுத்த நடத்தப்படும் திட்டமிட்ட சதி. இவ்வாறு நீதிபதி வர்மா கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ. 3,984.86 கோடி செலவில் 3வது ஏவுதளம் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்
வெள்ளி 4, ஏப்ரல் 2025 12:35:04 PM (IST)

பைக் டாக்ஸி சேவைக்கு தடை விதிக்க வேண்டும்: கர்நாடக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 3, ஏப்ரல் 2025 11:37:00 AM (IST)

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
வியாழன் 3, ஏப்ரல் 2025 8:22:22 AM (IST)

வக்ஃப் சொத்துக்கள் ஏழை முஸ்லிம்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் : கிரண் ரிஜிஜு
புதன் 2, ஏப்ரல் 2025 3:28:20 PM (IST)

மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதில் மத்திய அரசுக்கு விருப்பமில்லை: காங்கிரஸ்
புதன் 2, ஏப்ரல் 2025 12:09:49 PM (IST)

இடிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு: உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 5:40:05 PM (IST)
