» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தொடரும் ரயில் விபத்துகள்: மோடி அரசு விழித்துக் கொள்ளவில்லை - ராகுல் கண்டனம்
சனி 12, அக்டோபர் 2024 11:41:20 AM (IST)
பாஜக ஆட்சியில் ஏராளமான தொடர் ரயில் விபத்துகள் நடந்து வருகிறது. மோடி அரசு இன்னும் விழித்துக்கொள்ளவில்லை என்று ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் பாலாஷோரில் நிகழ்ந்த ரயில் விபத்து போன்றே தமிழகத்தின் கவரப்பேட்டையில் ரயில் விபத்து நிகழ்ந்துள்ள நிலையில், மத்திய அரசு விழித்துக்கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்களை பலி கொடுக்க வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடகம் மாநிலம் மைசூருரிலிருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டு சென்னை பெரம்பூர் வழியே தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு ரயில் (12578) நேற்று இரவு 9.30 மணியளவில் கவரப்பேட்டை அருகே சரக்கு ரயில் மீது மோதி விபத்தில் சிக்கியது.
வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் பெரம்பூரிலிருந்து புறப்பட்ட இந்த ரயில் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட பொன்னேரி மற்றும் கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே சென்னை-கூடூர் பிரிவில் இரவு 9.30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது, இதில் ரயிலின் 7 குளிர்சாதனப் பெட்டிகள் உள்பட 12 பெட்டிகள் தடம் புரண்டன, 2 பெட்டிகள் தீப்பற்றி எரிந்தன.
விபத்தில் சிக்கிய ரயில் பயணிகள் 19 பேர் காயமுற்றனர். நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்தில் சிக்கி காயமடைந்த 19 பேர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி மற்றும் பொன்னேரி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
விபத்தைத் தொடர்ந்து அரக்கோணத்தில் இருந்து தலா 2 தேசிய பேரிடர் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிவாரணம், மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் விபத்து நிகழ்ந்த பகுதியில் தற்போது கனமழை பெய்து வருவதால் சீரமைப்பு பணிகள் தொய்வு ஏற்பட்டுள்ளது.
விபத்து குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் உத்தரவின் பேரில் உயர்மட்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கவரப்பேட்டை ரயில் விபத்தை சுட்டிக்காட்டி பிரமதர் மோடி அரசு விழித்துக்கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்களை பலி கொடுக்க வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: ஒடிசா மாநிலம் பாலாஷோரில் நிகழ்ந்த ரயில் விபத்து போன்றே மைசூரு-தர்பங்கா ரயில் விபத்து நிகழ்ந்துள்ளது. நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளாகி இருப்பது பாலாஷோர் பயங்கர விபத்தையே பிரதிபலிக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் ஏராளமான தொடர் ரயில் விபத்துகள் நடந்தும் பல உயிர்கள் பலியானபோதும், மோடி அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை. மோடி அரசு விழித்துக்கொள்வதற்கு முன்பு இன்னும் எத்தனை குடும்பங்களை பலி கொடுக்க வேண்டும்? என ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.