தூத்துக்குடி மாவட்டம் நீண்ட கடற்கரையைக் கொண்ட பகுதியாகும். இங்கு ஏராளமான கிராமங்களில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சுனாமி ஆழிப்பேரலைக்குப் பிறகு கடலில் அவ்வப்போது ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட மக்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாகி வருகிறது.

தூத்துக்குடி ரோச் பூங்கா அருகே உள்ள கடற்பகுதியில் வழக்கமாகச் சிறிய படகுகள் நிறுத்தப்பட்டு, அதன் மூலம் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் அமாவாசை மற்றும் பௌர்ணமி காலங்களில் கடல் நீர் அதிகமாக அரிப்பதும், உள்வாங்குவதும் வாடிக்கையாகக் காணப்படும்.

இந்நிலையில், நேற்று ரோச் பூங்கா அடுத்துப் படகுகள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் திடீரெனக் கடல் நீர் பல மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியது. இதனால் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடிப் படகுகள் அனைத்தும் மணலில் தரைதட்டி நின்றன.

மேலும், தண்ணீர் வற்றிய கடற்கரை மணல் பகுதியில் நண்டு உள்ளிட்ட பல சிறிய கடல் உயிரினங்கள் வெளியில் தெரிந்தன. இந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் மற்றும் வழிப்போக்கர்கள் இந்த அரிதான நிகழ்வை ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர். கடலின் இந்த தற்காலிக மாற்றத்தைத் தொடர்ந்து, பின்னர் கடல் நீர் இயல்பு நிலைக்குத் திரும்பும் எனக் கூறப்படுகிறது.