தூத்துக்குடி மாவட்டம், கொளத்தூர் வேடப்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மனைவி அனிதா (33). அனிதா தனது 5 பவுன் தாலிச் சங்கிலியை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அடகு வைத்ததாகக் கூறப்படுகிறது. எதற்காக நகையை அடகு வைத்தாய் என்று கணவர் முத்துராஜ் கேட்டதற்குப் பதில் கூறாமல், இருவருக்கும் இடையே தினமும் குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 28ஆம் தேதி மீண்டும் கணவனுடன் சண்டை ஏற்பட்டதால், அனிதா மனவேதனையடைந்து தனது மகனுடன் புதியம்புத்தூர் அருகே உள்ள நடுவக்குறிச்சியில் உள்ள அக்கா வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அன்று காலை 11.00 மணியளவில், அக்கா வீட்டில் வைத்து அனிதா திடீரெனப் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்துள்ளார். பின்னர் இதுகுறித்துத் தனது அக்காவிடம் கூறியதை அடுத்து, உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த அனிதா, சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துப் புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உயிரிழந்த அனிதாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.