அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான என்.எம்.எம்.எஸ். (NMMS) திறனாய்வுத் தேர்வு டிசம்பர் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மத்திய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத்தின் (NMMS) கீழ், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவ - மாணவிகளுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் தகுதி பெறும் மாணவர்களுக்கு, 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 முடிக்கும் வரை மாதந்தோறும் ₹1,000 வீதம் ஆண்டுக்கு ₹12,000 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 6,695 பேர் உட்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நடப்பு கல்வி ஆண்டுக்கான என்.எம்.எம்.எஸ். (NMMS) திறனாய்வுத் தேர்வு வருகிற டிசம்பர் மாதம் 12-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

இத்தேர்வை எழுத விருப்பமுள்ள தகுதியான மாணவ - மாணவிகள், அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.dge.tn.gov.in என்ற முகவரிக்குச் சென்று விண்ணப்பப் படிவங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், தேர்வுக் கட்டணமாக ₹50-ஐ சேர்த்து, தாங்கள் படிக்கும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் வருகிற நவம்பர் 3-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.