தென்காசி அருகே 11 வயது உறவுக்கார சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த நபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துத் தென்காசி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தென்காசி அருகே உள்ள வாணாநகரம் பகுதியைச் சேர்ந்தவர் குமாரவேல் (47). தொழிலாளியான இவர், தனது உறவினர் ஒருவரின் 11 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுபற்றித் தகவல் அறிந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி சார்பில் கடந்த 30.07.2024 அன்று தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், குமாரவேலைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கின் விசாரணை தென்காசி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி மனோஜ்குமார் நேற்று தீர்ப்பு கூறினார்.

அதில், சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளி குமாரவேலுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்தத் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் அரசு தரப்பில் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற வழக்கறிஞர் சேவியர் பாண்டியன் ஆஜரானார்.