தூத்துக்குடி பூபாலராயபுரத்தைச் சேர்ந்த தொழிலாளியான அந்தோணி (54) என்பவர் நேற்று பிற்பகலில் மதுபானக் கடைக்குச் சென்றுள்ளார். அப்போது, காலி மதுபாட்டிலைக் கொடுத்து ரூ.10 வாங்குவது தொடர்பாகப் பார் ஊழியருக்கும் தொழிலாளி அந்தோணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், பார் உரிமையாளரான சாம்சன் என்பவர் ஆத்திரமடைந்து காய்கறி வெட்டுவதற்காக வைத்திருந்த கத்தியை எடுத்து அந்தோணியின் வயிற்றில் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அந்தோணியின் வயிற்றிலிருந்து குடல் வெளியே வந்ததையடுத்து, அவர் ரத்தம் சொட்டச் சொட்ட அலறியபடி வெளியே ஓடிவந்துள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாகத் தகவல் தெரிவிக்கவே, 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தோணி மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு அவசர அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து வடபாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள பார் உரிமையாளர் சாம்சனைத் தேடி வருகின்றனர். டாஸ்மாக் பாரில் தொழிலாளி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

