பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் விநியோகிக்கப்படும் எத்தனால் கலந்த பெட்ரோல், மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளை முழுமையாகப் பூர்த்தி செய்கிறது என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

நாட்டில் ஏப்ரல் 1 முதல் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கர்நாடக உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் பெட்ரோல் நிலையங்களில் 20 சதவீதத்திற்குப் பதிலாக 31 சதவீதம் வரை எத்தனால் கலக்கப்படுவதாகக் குற்றம்சாட்டியது.

இக்குற்றச்சாட்டை மறுத்து மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 893 பெட்ரோல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டன. இதில் கர்நாடகாவில் இருந்து எடுக்கப்பட்ட 56 மாதிரிகளும் அடங்கும்.

இந்திய தர நிர்ணய அமைப்பின் (BIS) விதிகளின்படி, பெட்ரோலில் 19 முதல் 21 சதவீதம் வரை எத்தனால் இருக்க வேண்டும். பரிசோதிக்கப்பட்ட அனைத்து மாதிரிகளிலும் எத்தனால் அளவு சரியாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2014-15 முதல் இத்திட்டத்தின் மூலம் நாட்டிற்கு ₹1.97 லட்சம் கோடி அன்னியச் செலாவணி சேமிக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் மறுப்பு:

மத்திய அரசைத் தொடர்ந்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் இக்குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளன. அக்டோபர் மாதம் கர்நாடக அரசு ஆய்வு நடத்தியபோது எண்ணெய் நிறுவனங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும், உரிய ஆய்வக அறிக்கைகள் வழங்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளன. மேலும், இதுவரை எத்தனால் கலந்த எரிபொருளால் வாகனங்கள் பழுதடைந்ததாக எந்தப் புகாரும் வரவில்லை என்றும் நிறுவனங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.