தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுத் தலைநகர் சென்னையில் மக்கள் அதிகளவில் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடி வரும் நிலையில், நகரின் காற்றின் தரம் சர்வதேச அளவில் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது.
சென்னையில் இன்று காலை முதலே விட்டுவிட்டு மழை பெய்து வந்ததால், பட்டாசு வெடிப்பது சற்றே குறைந்திருந்தது. இருப்பினும், மாலையில் மழை ஓய்ந்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் திரளாக வீதிகளுக்கு வந்து அதிக எண்ணிக்கையிலான பட்டாசுகளை வெடித்துக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரே மணிநேரத்தில் எகிறிய மாசு அளவு: பட்டாசுகளிலிருந்து வெளிவந்த அதிகப்படியான புகையின் காரணமாகச் சென்னையின் காற்றின் தரம் மிகக் குறுகிய காலத்தில் கடுமையாகச் சரிந்தது:
காற்றின் தரம் 500 புள்ளிகளுக்குள் இருந்தாலே அது 'கடுமையான பிரிவு' எனக் கருதப்படும் நிலையில், சர்வதேச அளவிலான காற்றின் தரக் குறியீட்டுப் பட்டியலில் (AQI) சென்னை 907 புள்ளிகளுடன் மிக மோசமான பிரிவில் இடம்பெற்றுள்ளது.
இன்று இரவு 7 மணி நிலவரப்படி 411 புள்ளிகளாக இருந்த காற்றின் தரக் குறியீடு, அடுத்த ஒரு மணிநேரத்தில் (இரவு 8 மணி நிலவரப்படி) 907 புள்ளிகளாக உயர்ந்து உலக அளவிலான பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
உலகளவிலான காற்றின் தரக் குறியீட்டு வரைபடத்தில் சென்னை 'மிகவும் கடுமையான' பிரிவில் சிவப்பு மண்டலமாக மாறியுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

