தூத்துக்குடி சிதம்பர நகரில் மாநகராட்சி பேரங்காடி கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. ஆனால் இங்கு எவ்விதமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என்றும், இது தொடர்பாக பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த பேரங்காடியில் பாதுகாப்பு வசதி இல்லை, கண்காணிப்பு கேமரா இல்லை. மேலும், கழிவறைகளில் தண்ணீர் வசதி இல்லை. தண்ணீர் வசதி இல்லாததால் பணிபுரியும் பெண்கள் கழிவறைகளை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அங்குள்ள வணிக நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள், மற்றும் அங்கு வரும் பெண்கள் இயற்கை உபாதைகளுக்கு வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. பகல் மற்றும் இரவு நேர பாதுகாப்பிற்கு வாட்ச்மேன் நியமிக்க வேண்டும். மின்சார பழுதுகளை சரிசெய்ய நிரந்தர எலக்ட்ரீசியன் ஒருவரை நியமிக்க வேண்டும். மூன்று தளங்களையும் தூய்மைப்படுத்த ஆட்கள் நியமிக்க வேண்டும். பாதுகாப்பிற்காக மூன்று நுழைவு வாயில்கள் அமைக்க வேண்டும்.
இரண்டு ஆண்டுகளாக எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்கப்படாததால், பேரங்காடிக்கு வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சிதம்பர நகர் பேரங்காடியில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

