தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 2026 மார்ச் 31 வரை நிலுவையில் உள்ள வீட்டுக்கடன் மற்றும் அடமானக் கடன்களுக்கான அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும் எனக் கடந்த ஆகஸ்ட் மாதம் அரசு அறிவித்த போதிலும், அதற்கான அரசாணை இதுவரை வெளியிடப்படவில்லை.

தமிழகத்தில் பொதுமக்களுக்கு நியாயமான விலையில் வீட்டுக்கடன் மற்றும் வீட்டுமனைகள் கிடைப்பதற்காகக் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் தொடங்கப்பட்டன. தற்போதைய நிலவரப்படி மாநிலம் முழுவதும் 680 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான சங்கங்களில் கடன் வாங்கியவர்கள் தொகையைத் திருப்பிச் செலுத்தாததால், சங்கங்களின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

சங்கங்கள் திவாலாகாமல் தடுக்கும் நோக்கில், நிலுவைத் தவணைத் தொகையின் மீதான அபராத வட்டியைத் தள்ளுபடி செய்யும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த காலங்களில் செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் கீழ் முழுக் கடன் தொகையையும் செலுத்தியவர்களில் பலருக்கும், தற்போது வரை அதற்கான சொத்துப் பத்திரங்கள் திரும்பக் கிடைக்காமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டம் உட்படத் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 2026 மார்ச் 31-ஆம் தேதி வரை நிலுவையில் உள்ள வீட்டுக்கடன், அடமானக் கடன் போன்றவற்றுக்குத் தவணைத் தொகை மீதான அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும் எனக் கடந்த ஆகஸ்ட் மாதம் அரசு அறிவித்தது. ஆனால், அறிவிப்பு வெளியாகிப் பல மாதங்களாகியும் இதற்கான அரசாணை இன்னும் வெளியாகவில்லை.

இது குறித்துக் கூட்டுறவு வீட்டுவசதி சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில்: "கடந்த காலங்களில் செயல்படுத்தப்பட்ட அபராத வட்டி தள்ளுபடி திட்டம் போன்று இல்லாமல், தற்போது கூடுதல் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினருக்கான வட்டியில் ஒரு சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றபடி அரசு விரைந்து அரசாணை வெளியிட வேண்டும்.

இது தொடர்பான கோப்புகள் தயாரிக்கப்பட்ட நிலையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறோம். அரசாணை வராததால் கடன் பெற்றவர்கள் சலுகையை எதிர்பார்த்துத் தவணைகளைச் செலுத்தாமல் உள்ளனர்; இதனால் வழக்கமான கடன் வசூல் பணிகள் முடங்கியுள்ளன. கடன் வசூல் இல்லாததால் சங்கத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் உள்ளது. இதன் மீது தமிழக அரசு தனி கவனம் செலுத்துமா? இது சங்கங்களின் நிதி நிலையை மேலும் பாதிக்கும்" எனத் தெரிவித்தார்.