கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாட்டின் தென்கோடியில் அமைந்துள்ள சுமார் 20 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட, அதிக கல்வியறிவு பெற்ற மாவட்டமாகும். புவியியல் ரீதியாக, தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையிலிருந்து அதிக தொலைவில் அமைந்துள்ளதால், மாவட்ட மக்கள் தலைநகருக்குச் செல்வதற்கு நீண்ட நேரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. இதனால், கன்னியாகுமரி மாவட்ட மக்களின் நீண்டதூரப் பயணங்களுக்கு ரயில் போக்குவரத்து மிகவும் முக்கியமானதாக உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சென்னைக்கு தற்போது இரண்டு தினசரி இரவு நேர ரயில்கள் இயக்கப்படுகின்றன. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ஆகிய இந்த இரண்டு ரயில்களும் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இத்தனை ஆண்டுகளாகியும் நாகர்கோவிலிலிருந்து சென்னைக்கு புதிதாக எந்தவொரு தினசரி இரவு நேர ரயிலும் அறிமுகப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் கொல்லம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், இந்த ரயிலில் கன்னியாகுமரி மாவட்டப் பயணிகளுக்குக் கிடைக்கும் முன்பதிவு இருக்கைகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. இதனால், பயணிகள் முன்பதிவு இருக்கைகள் கிடைக்காமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

கடந்த 20 ஆண்டுகளில் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சென்னைக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்தப் பயணத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் போதுமான ரயில் சேவைகள் இல்லாததால், தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தினசரி சுமார் 100 பேருந்துகளை இயக்கி வருகின்றன.

ரயில்களில் முன்பதிவு இருக்கைகள் கிடைக்காத காரணத்தால், பயணிகள் அதிக கட்டணம் செலுத்தி தனியார் பேருந்துகளில் நீண்டதூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, முதியவர்கள், பெண்கள், குழந்தைகளுடன் பயணம் செய்பவர்கள் மற்றும் குடும்பத்துடன் பயணம் மேற்கொள்பவர்கள் அதிக சிரமங்களைச் சந்திக்கின்றனர். எனவே, பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் தினசரி ரயில் சேவைகளை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

தென்னிந்தியாவின் முக்கியமான சுற்றுலா மற்றும் ஆன்மீகத் தலங்களில் கன்னியாகுமரியும் ஒன்றாகும். ராமேஸ்வரத்திற்கு அடுத்தபடியாக, ஆன்மீகப் பயணிகள் அதிக அளவில் வருகை தரும் முக்கியமான புனிதத் தலமாகவும் கன்னியாகுமரி விளங்குகிறது.

1979 ஏப்ரல் 15ஆம் தேதி முதல் கன்னியாகுமரிக்கு அகலப்பாதை ரயில் சேவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. அதனைத் தொடர்ந்து, 1994ஆம் ஆண்டு கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு நேரடி ரயில் சேவையாக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்ப காலத்தில் சென்னை எழும்பூர் – திருச்சி வழித்தடம் மீட்டர் கேஜ் பாதையாக இருந்ததால், இந்த ரயில் ஈரோடு வழியாக சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்பட்டது. பின்னர், சென்னை எழும்பூர் – திருச்சி வழித்தடம் அகலப்பாதையாக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் எழும்பூர் வழித்தடத்திற்கு மாற்றப்பட்டது.

கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஆன்மீக யாத்ரீகர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு, சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு ஒரு தனி தினசரி ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும். இந்த ரயில் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாக கன்னியாகுமரியை வந்தடையும் வகையிலும், பயணிகள் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட்டு, மாலையில் சூரிய அஸ்தமனத்தைக் கண்டு மகிழ்ந்த பின்னர் மீண்டும் சென்னைக்குப் புறப்படும் வகையிலும் கால அட்டவணை அமைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு சுற்றுலா மற்றும் ஆன்மீகப் பயணிகளின் தேவையை மையமாகக் கொண்டு தனி ரயில் இயக்கப்பட்டால், கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஆன்மீக யாத்ரீகர்கள் அதிக அளவில் இந்த ரயிலைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. இதன் மூலம் மாவட்ட மக்களின் அன்றாடப் பயணத் தேவைகளுக்கும், சுற்றுலாப் பயணிகளின் தேவைகளுக்கும் தனித்தனியாக ரயில் சேவைகளைத் திட்டமிட முடியும்.

பயணிகளின் முக்கியக் கோரிக்கைகள்

1. கன்னியாகுமரியிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு புதிய தினசரி சூப்பர்ஃபாஸ்ட் ரயில்

கன்னியாகுமரியிலிருந்து திருநெல்வேலி, மதுரை, நாமக்கல், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக சென்னை சென்ட்ரலுக்கு புதிய தினசரி சூப்பர்ஃபாஸ்ட் ரயில் இயக்க வேண்டும்.

இந்த ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் வடஇந்திய நகரங்களுக்கான பல்வேறு ரயில்களுக்கு இணைப்பு ரயிலாகவும் செயல்படும். இதனால், கன்னியாகுமரி மாவட்டப் பயணிகள் சென்னையில் எழும்பூரிலிருந்து சென்ட்ரலுக்கு மாறிச் செல்ல வேண்டிய சிரமம் தவிர்க்கப்படும். மேலும், வடஇந்தியாவிற்குப் பயணம் செய்யும் பயணிகளுக்கும் இந்த ரயில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

2. நாகர்கோவில் – தாம்பரம் வாராந்திர மும்முறை ரயிலை தினசரி ரயிலாக மாற்ற வேண்டும்

2019ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நாகர்கோவில் – தாம்பரம் ரயில் தற்போது வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை தினசரி ரயிலாக மாற்ற வேண்டும் என்று கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சென்னை – கன்னியாகுமரி இடையேயான இருவழிப்பாதைப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், கூடுதல் ரயில்களை இயக்குவதற்கான வாய்ப்புகளை ரயில்வே நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும். எனவே, நாகர்கோவில் – தாம்பரம் ரயிலைத் தினசரி ரயிலாக மாற்றி இயக்க வேண்டும்.

3. திருவனந்தபுரம் – தாம்பரம் அம்ரித் பாரத் வாராந்திர ரயிலை தினசரியாக இயக்க வேண்டும்

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட திருவனந்தபுரம் – தாம்பரம் அம்ரித் பாரத் வாராந்திர ரயில் கன்னியாகுமரி மாவட்டப் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

இந்த ரயிலுக்குப் பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், இதனை வாராந்திர சேவையிலிருந்து தினசரி ரயிலாக மாற்றி இயக்க வேண்டும். மேலும், கன்னியாகுமரி மாவட்டப் பயணிகளின் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு, இந்த ரயிலுக்கு இரணியல் ரயில் நிலையத்தில் கட்டாயம் நிறுத்தம் வழங்க வேண்டும்.

4. புதிய ரயிலுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் வரலாற்றுப் பெயரைச் சூட்ட வேண்டும்

இந்திய ரயில்வே பல்வேறு ரயில்களுக்கு வரலாற்று மற்றும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த பெயர்களைச் சூட்டி இயக்கி வருகிறது. ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தின் தொன்மையான வரலாற்றுப் பெயர்கள் இதுவரை எந்தவொரு ரயிலுக்கும் சூட்டப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

பண்டைய காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் சேரநாட்டின் தென்பகுதியில் ஆய்நாடு, வேணாடு, நாஞ்சில்நாடு, இடைநாடு போன்ற வரலாற்றுப் பெயர்களால் அழைக்கப்பட்டன. எனவே, கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு புதிதாக அறிமுகப்படுத்தப்படும் ரயிலுக்கு 'இடைநாடு எக்ஸ்பிரஸ்' அல்லது 'ஆய்நாடு எக்ஸ்பிரஸ்' எனப் பெயர் சூட்டி இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

கன்னியாகுமரி மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான சென்னைக்கு இரண்டாவது தினசரி இரவு நேர ரயிலை அறிமுகப்படுத்துவது, நாகர்கோவில் – தாம்பரம் ரயிலை தினசரி ரயிலாக மாற்றுவது மற்றும் திருவனந்தபுரம் – தாம்பரம் அம்ரித் பாரத் ரயிலை தினசரி சேவையாக மாற்றுவது போன்ற கோரிக்கைகளை ரயில்வே நிர்வாகம் உடனடியாகப் பரிசீலிக்க வேண்டும்.

மேலும், சுற்றுலா மற்றும் ஆன்மீகப் பயணிகளுக்காகத் தனியாக ஒரு தினசரி ரயிலை அறிமுகப்படுத்துவதன் மூலம் கன்னியாகுமரியின் சுற்றுலா வளர்ச்சிக்கும் பெரும் ஊக்கமளிக்க முடியும்.

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இரண்டு தினசரி இரவு நேர ரயில்களை மட்டுமே நம்பியிருக்கும் கன்னியாகுமரி மாவட்ட மக்களின் பயணத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, கூடுதல் ரயில் சேவைகளை அறிமுகப்படுத்த தெற்கு ரயில்வே மற்றும் ரயில்வே வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே குமரி மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக உள்ளது.