இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹக்லே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்குத் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. ஷெய்பெர்ட் (7), ஆலன் (16), மிட்சல் (6) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறினர். தொடர்ந்து 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கிளென் பிலிப்ஸ் மற்றும் ஜேக்கப்ஸ் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தனர்.

அரைசதம் விளாசிய பிலிப்ஸ் 70 ரன்களுடனும், ஜேக்கப்ஸ் 58 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார், பிரின்ஸ் யாதவ் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

181 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்தில் தடுமாற்றம் நிலவியது. சஞ்சு சாம்சன் 14 ரன்களிலும், இந்தத் தொடரில் முதல்முறையாகக் களமிறங்கிய இளம் வீரர் சூர்யவன்ஷி 4 ரன்னிலும் ஆட்டமிழந்ததால், இந்திய அணி 44 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் (7) மற்றும் அக்ஷர் படேல் (11) ஆகியோரும் குறைந்த ரன்களில் ஏமாற்றம் அளித்தனர். இருப்பினும், நமன் திர் 17 பந்துகளில் 31 ரன்கள் குவித்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அதன்பிறகு, துணை கேப்டன் திலக் வர்மா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இருவரும் நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடி 1 பந்து மீதமிருந்த நிலையில் அணியை வெற்றி பெறச் செய்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக் வர்மா 26 பந்துகளில் 51 ரன்களுடனும், நிதிஷ் குமார் 13 பந்துகளில் 26 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வலுவான முன்னிலையைப் பெற்றுள்ளது.