பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத பணமும், ஜி.பே. மூலம் பெறப்பட்ட பல லட்சம் ரூபாய் முறைகேடும் கண்டறியப்பட்டுள்ளது.

பாளை யூனியன் அலுவலகத்தில் பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் பெறப்படுவதாகவும், தீபாவளி வசூல் நடப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி எஸ்கால் தலைமையில், இன்ஸ்பெக்டர் ராபின் ஞானசிங், சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரியப்பன், அசீர், பிரகாஷ் உள்ளிட்ட போலீசார் அங்கு அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின் போது கணக்கில் வராத ரூபாய் 47,700 மற்றும் ஜி.பே. மூலம் பெறப்பட்ட ரூபாய் 2 லட்சத்து 30 ஆயிரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சில முக்கிய ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றினர்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய தீவிர சோதனையில், 5 ஊழியர்கள் கடந்த 2026-ம் ஆண்டில் மட்டும் ஜி.பே. மூலம் ரூபாய் 9 லட்சத்து 14 ஆயிரத்து 700 பெற்றது தெரியவந்துள்ளது.

துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் ஜி.பே. மூலம் ரூபாய் 80,700 பெற்றுள்ளார். அக்கவுண்டன்ட் செல்வராணி ரூபாய் 2.55 லட்சம் பெற்றுள்ளார். உதவியாளர் சீனிசெல்வி ரூபாய் 1.10 லட்சம் பெற்றுள்ளார். ஓவர்சீயர் செல்வி ரூபாய் 67 ஆயிரம் பெற்றுள்ளார்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக, அதிகாரிகளின் சொந்தப் பணத்தில் இருந்து மாதம் ரூபாய் 6 ஆயிரம் மட்டும் ஊதியமாகப் பெறும் தற்காலிகப் பணியாளர் பொன்செல்வி என்பவர் ஜி.பே. மூலம் ரூபாய் 4.02 லட்சம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

இதனால் இவரது ஜி.பே. மூலம் அதிகாரிகளுக்குப் பணம் லஞ்சமாகக் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் சந்தேகம் அடைந்துள்ளனர். இதனையடுத்து இந்த 5 பேரிடமும் லஞ்ச ஒழிப்புப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.