விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியைச் சேர்ந்த வடிவேல் - பவானி தம்பதியின் 2-வது மகள் ஹேமலதா (7). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 11-ம் தேதி சிறுமி தனது குடும்பத்தினருடன் பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில், மறுநாள் 12-ம் தேதி அதிகாலை மர்மமான முறையில் மாயமானார்.

இதுகுறித்துப் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 10 தனிப்படைகள் அமைத்துத் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இருப்பினும் சிறுமியைக் கண்டுபிடிக்க முடியாததால், வழக்கு மாநில காவல்துறை தலைவரின் (டிஜிபி) உத்தரவின்பேரில் சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது.

சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் ஜவஹர், துணைப் காவல் கண்காணிப்பாளர் கீதா தலைமையிலான போலீசார் விசாரணையைத் தொடங்கினர். விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசன மேற்கொண்ட அவர்கள், ஆலம்பூண்டி கிராமத்தில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின் தாய், தந்தை மற்றும் உறவினர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டுத் தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், இதுவரை நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மாயமான சிறுமி உயிருடன் இருக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், மாயமான சிறுமி விற்கப்பட்டாரா? என்ற புதிய கோணத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். சிறுமி மாயமாகி 13 நாட்கள் கடந்துள்ள நிலையில், விரைவில் அவர் மீட்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.