தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்குக் கூடுதல் நிவாரண நிதியாக ரூ. 5.25 கோடி வழங்கத் தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 22.05.2018 மற்றும் 23.05.2018 ஆகிய நாள்களில் நடைபெற்ற ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை எதிர்ப்புப் போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 25 லட்சமும், கொடுங்காயமடைந்த 40 பேருக்குத் தலா ரூ. 5 லட்சமும் நிவாரண நிதியாக ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கூடுதல் நிவாரணம் வழங்கிடக் கோரி அளித்த மனுக்களைக் கனிவுடன் பரிசீலனை செய்து, நீதியரசர் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகளின்படி கூடுதல் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய தலா ரூ. 50 லட்சத்தில், ஏற்கனவே வழங்கப்பட்ட ரூ. 25 லட்சம் போக மீதமுள்ள தலா ரூ. 25 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 3.25 கோடி.

கொடுங்காயமடைந்த 40 நபர்களுக்கு வழங்க வேண்டிய தலா ரூ. 10 லட்சத்தில், ஏற்கனவே வழங்கப்பட்ட ரூ. 5 லட்சம் போக மீதமுள்ள தலா ரூ. 5 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 2 கோடி. இதன்படி மொத்தம் ரூ. 5.25 கோடி கூடுதல் நிவாரண நிதியாக வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.