தூத்துக்குடியில் கடந்த 2018-ஆம் ஆண்டு மே 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், படுகாயமடைந்த 40 பேருக்கும் மொத்தம் ரூ. 5.25 கோடி கூடுதல் இழப்பீட்டுத் தொகையை வழங்கத் தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

நீதியரசர் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று இந்தக் கூடுதல் நிவாரணத்தை வழங்கியுள்ள தமிழக அரசிற்கும், முதலமைச்சருக்கும் ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.

இது குறித்து அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மா.கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவதுடன் அரசின் கடமை முடிந்துவிட முடியாது. இழப்பீடு என்பது அரசின் கருணையல்ல, பாதிக்கப்பட்ட மக்களின் உரிமை. அவர்களுக்கு உண்மையான நீதி கிடைப்பதே முழுமையான நிவாரணமாக அமையும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் அனைத்துப் பரிந்துரைகளையும் துரிதமாகவும் முழுமையாகவும் நடைமுறைப்படுத்த வேண்டும். துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொண்டு, அவர்களைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையின் கட்டுமானங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தியாகிகளின் நினைவாக அரசு சார்பில் தூத்துக்குடியில் நினைவகம் அமைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்தம் குடும்பங்களின் வாழ்வாதாரம், மருத்துவம் உள்ளிட்ட நீண்டகாலத் தேவைகளுக்கான பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நீதி கிடைக்கும் வரை ஜனநாயக வழியிலான போராட்டமும் குரலும் தொடர்ந்து ஒலிக்கும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.