பெங்களூருவிலிருந்து கோவில்பட்டிக்குக் காரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்புப் போலீசாருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவின் பேரில், போலீசார் கோவில்பட்டி பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று மதியம் இளையரசனேந்தல் சாலையோரத்திலுள்ள காட்டுப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒரு கார் மற்றும் மின்சார மோபட்டை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது காரில் இருந்து மூட்டைகளை மோபட்டில் ஏற்றிக் கொண்டிருந்த 3 பேர் தப்பி ஓட முயன்ற போது, அவர்களைப் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
காரைச் சோதனை செய்தபோது, அதில் ரூ.10 லட்சம் மதிப்பிலான 36 மூட்டை தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கோவில்பட்டி அருகே கெச்சிலாபுரத்தைச் சேர்ந்த மகேஷ்குமார் (35), சுபா நகரைச் சேர்ந்த செல்வ மாரியப்பன் (45) மற்றும் குறுக்குச்சாலை அருகே மேலச்செய்தலையைச் சேர்ந்த முத்துவேல் (40) என்பது தெரியவந்தது. இவர்கள் பெங்களூருவில் இருந்து காரில் புகையிலைப் பொருட்களைக் கடத்தி வந்து கோவில்பட்டி பகுதியில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட 3 பேரிடமிருந்தும் புகையிலைப் பொருட்கள், கார், மின்சார மோபட் மற்றும் 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், புகையிலைப் பொருட்களை வாங்குபவர்களுக்குக் கொடுப்பதற்காக வைத்திருந்த தீபாவளி பரிசுகளான பாதாம் பாக்கெட்டுகள் மற்றும் சோன்பப்டி பாக்கெட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரையும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களையும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் போலீசார் ஒப்படைத்தனர். இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

