இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த 'இந்தியன் 2' திரைப்படம் கடந்த 2024-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இப் படத்தின் இறுதிக் காட்சிகளிலேயே மூன்றாம் பாகத்திற்கான அதிகாரப்பூர்வ டிரெய்லரும் இணைக்கப்பட்டிருந்தது.
எனினும், 'இந்தியன் 2' மற்றும் அதனைத் தொடர்ந்து வெளியான 'கேம் சேஞ்சர்' ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததாலும், இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு இடையே எழுந்த சில நடைமுறைச் சிக்கல்களாலும் 'இந்தியன் 3' வெளியீடு தள்ளிப்போய் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அனைத்துச் சிக்கல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் (Lyca Productions) தனது எக்ஸ் (X) தளத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், "எந்தவித சமரசமும் இல்லாத மனநிலையுடன் சேனாதிபதி மீண்டும் திரும்பிவிட்டார்! 'இந்தியன் 3: வார் மோட்' (Indian 3: War Mode) மூலம் அந்த கம்பீரமான மறுவருகை தொடங்குகிறது" எனக் குறிப்பிட்டுள்ளது.
இப் புதிய அறிவிப்புடன் படக்குழு வெளியிட்டுள்ள சிறப்பு போஸ்டரில், மூன்று போர் வீரர்கள் புழுதியைக் கிளப்பியபடி பரந்த வெளியில் வேகமாகப் பயணிப்பது போலவும், அவர்கள் கிளப்பும் புழுதி மூன்று நீளமான கோடுகளாகத் தோன்றும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 1996-ல் வெளியான 'இந்தியன்' படத்தின் மூலம் தொடங்கிய சேனாதிபதியின் வரலாற்றுப் பயணம், 2024-ல் 'இந்தியன் 2' எனத் தொடர்ந்து, தற்போது 'இந்தியன் 3' மூலம் நிறைவடையவுள்ளது. இப் படத்திற்கு அனிருத் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

