அமெரிக்காவில் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலுக்கு முன்பாக ஈரான் மீது எவ்வித இராணுவத் தாக்குதலும் நடத்தப்பட மாட்டாது என்றும், அந்நாட்டுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
இது குறித்துப் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளதாவது: "நாங்கள் ஈரானுடன் தொடர்ந்து ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம். பொருளாதார ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் ஈரான் தற்போது மிகவும் பலவீனமான நிலையில் உள்ளது. அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள கடுமையான பொருளாதாரத் தடைகள் முழு வீச்சில் தொடர்ந்து அமலில் இருப்பதை நான் அனைவருக்கும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
உலகளவில் அத்தியாவசியமான ஹார்முஸ் ஜலசந்தி கடல் பாதை வழியாகக் கச்சா எண்ணெய் போக்குவரத்து எவ்வித தடையுமின்றித் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இச்சூழ்நிலையில், அமெரிக்காவில் வரும் நவம்பர் 3-ம் தேதி நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக, எந்த நேரத்திலும் நாங்கள் ஈரான் மீது இராணுவத் தாக்குதலை நடத்த மாட்டோம். அதேவேளையில், ஈரானிடம் அணு ஆயுதம் சேர்வதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், தேர்தல் வரை தாக்குதல் இருக்காது என்ற அமெரிக்க அதிபரின் இப் பேச்சு சர்வதேச அரசியல் தளத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

