தாம்பரம் - செங்கோட்டை இடையேயான எக்ஸ்பிரஸ் ரயில் சேவை முழுமையாக மின்சார என்ஜின் கொண்டு இயக்கப்படத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் பயண நேரம் 1 மணி நேரம் வரை குறைந்துள்ளதால் தென்மாவட்ட பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

செங்கோட்டை - தாம்பரம் இடையே வாராந்திர மும்முறை எக்ஸ்பிரஸ் ரயில் சேவை (வண்டி எண்: 20683/20684) கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.

தாம்பரம் - செங்கோட்டை (வண்டி எண் 20683): ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் இரவு 8.50 மணிக்குத் தாம்பரத்திலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்குச் செங்கோட்டையை வந்தடைகிறது.

செங்கோட்டை - தாம்பரம் (வண்டி எண் 20684): திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் செங்கோட்டையில் இருந்து மாலை 5.35 மணிக்குக் கிளம்பி சேரன்மாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கடையம், பாவூர்சத்திரம் வழியாக மறுநாள் காலை 7.25 மணிக்குத் தாம்பரத்தைச் சென்றடைகிறது.

தமிழ்நாடு ரயில்வே பாதைகளில் கடைசிப் பகுதியாக மின்மயமாக்கப்படாமல் இருந்த திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி வழித்தடம் தற்போது 100 சதவீதம் மின்மயமாக்கப்பட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

இதன் தொடர்ச்சியாக, தாம்பரத்திலிருந்து செங்கோட்டைக்குப் புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில், மின்சார என்ஜின் கொண்டு தனது சேவையைத் தொடங்கியது. இதனால் திருவாரூர் ரயில் நிலையத்தில் டீசல் என்ஜினுக்கு மாற்றுவதற்காக எடுத்துக்கொள்ளப்படும் 20 நிமிடங்கள் வரை மிச்சமாகிறது.

முன்பு நெல்லைக்குக் காலை 8.10 மணிக்கு வந்து சேர்ந்த இப் ரயில், இனி காலை 7.45 மணிக்கே வந்துவிடும். அதேபோல் செங்கோட்டையை காலை 9.50 மணிக்கே சென்றடைய வாய்ப்புள்ளது. மறுமார்க்கத்தில் தாம்பரத்திற்குப் பயணிக்கும் ரயிலும் காலை 6.35 மணிக்கே தாம்பரத்தை அடையும். இரு வழிகளிலும் 1 மணி நேரப் பயண நேரம் மிச்சமாவதால் பயணிகள் நிம்மதியடைந்துள்ளனர்.

இச்சிறப்பான மாற்றத்தைத் தொடர்ந்து, தாம்பரம் - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக 6 பெட்டிகளை இணைப்பதோடு, இச் சேவையை வாராந்திர ரயிலாக இல்லாமல் தினசரி ரயிலாக மாற்றி இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.