திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த 2021-ஆம் ஆண்டு 13 வயதுச் சிறுமியைப் பாலியல் தொந்தரவு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாகத் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, திருச்செந்தூர் காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த முகமது அலி மகன் முத்துவாப்பா (30) என்பவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இவ்வழக்கை விசாரித்த நீதிபதி முருகன் இன்று தீர்ப்பளித்தார்.
அதில், முத்துவாப்பா மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவரைக் குற்றவாளி என உறுதி செய்த நீதிபதி, அவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கவும் நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.

