சி.எஸ்.ஐ. தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தில் காலியாக இருந்த பேராயர் பதவிக்கான தெரிவுப் பட்டியல் தேர்தல் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி நாசரேத் பரி. யோவான் பேராலயத்தில் நடைபெற்றது. இதில் 10 குருவானவர்கள் போட்டியிட்ட நிலையில், எஸ்.டி.கே. அணி சார்பில் போட்டியிட்ட மோசஸ் ஜெபராஜ், டி.ஜி.ஏ. தாமஸ், தேவராஜன், நவராஜ் ஆகிய நால்வர் தேர்வுப் பட்டியலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, நேற்று (நவம்பர் 24) சென்னையில் நடைபெற்ற சி.எஸ்.ஐ. சினாடு பேரவைக் கூட்டத்தில், தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தின் 3-வது பேராயராகக் குருவானவர் மோசஸ் ஜெபராஜ் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், இன்று காலை நாசரேத் பரி. யோவான் பேராலயத்தில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனைக்குச் சி.எஸ்.ஐ. பிரதம பேராயர் (மாடரேட்டர்) ரூபன் மார்க் தலைமை தாங்கினார். துணைப் பிரதம பேராயர் பிரான்சிஸ், சினாடு கழகப் பொதுச்செயலாளர் பெர்னாண்டஸ் ரத்தினராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கன்னியாகுமரி பேராயர் கிறிஸ்டோபர் விஜயன் ஆரம்ப ஜெபம் செய்தார்; திருமண்டல குருத்துவச் செயலர் டி.ஜி.ஏ. தாமஸ் வரவேற்றார்.

விழாவில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராயர்கள் கலந்து கொண்டு, புதிய பேராயர் மோசஸ் ஜெபராஜ் தலையில் கை வைத்து அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, புதிய பேராயருக்குச் செங்கோல், பைபிள், திருச்சிலுவை, சிறப்பு அங்கி ஆகியவை வழங்கப்பட்டு, முத்திரை மோதிரம் அணிவிக்கப்பட்டது. சென்னை பேராயர் பால் பிரான்சிஸ் சிறப்புச் செய்தி வழங்கினார். பின்னர், புதிய பேராயரைப் பேராயர் ஆசனத்தில் அமர்த்தும் நிகழ்வும், சிறப்பு நற்கருணை ஆராதனையும் நடைபெற்றன.

முன்னதாக, நாசரேத் சேகரம் சார்பில் பேராலயத் தலைமை குருவானவர் அல்பர்ட் ஜெயசிங், பிரதம பேராயர் ரூபன் மார்க் உள்ளிட்ட அனைத்துப் பேராயர்களையும் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். இதில் சேகரச் செயலர் ராஜசிங், பொருளாளர் லேவி அசோக் சுந்தர்ராஜ் மற்றும் சேகர கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் திருமண்டல லே செயலாளர் எஸ்.டி.கே. ராஜன், பொருளாளர் டி.கே.எம். ஜான்சன், கல்லூரிகளின் நிலைக்குழுச் செயலர் ஜெபச்சந்திரன், நடுநிலைப்பள்ளிகளின் மேலாளர் தேவராஜன், திருமண்டலப் பெருமன்ற உறுப்பினர்கள் மாமல்லன், ஆண்ட்ரூஸ், செல்வின், ஸ்டெல்லா, சேகரத் தலைவர்கள், குருவானவர்கள், கல்வி நிறுவனங்களின் தாளாளர்கள், முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் திரளான திருச்சபை மக்கள் கலந்து கொண்டனர்.