தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்ட 'அண்ணன் சீர்' திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குள் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்குத் திருமணத்தின்போது ஒரு பவுன் (8 கிராம்) தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப் புடவை ஆகியவை இலவசமாக வழங்கப்படவுள்ளன.

இதற்கான நடப்பு நிதியாண்டில் முதல்கட்டமாக ரூ. 812 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தகுதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் தனியே வெளியிடப்படும் என்றும், தகுதியான ஒப்பந்ததாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தங்க நாணயமும் பட்டுப்புடவையும் கொள்முதல் செய்யப்படும் என்றும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், 'அண்ணன் சீர்' திட்டத்தில் பயன்பெற ஆதார் அட்டை கட்டாயம் என்று தமிழக அரசு தற்போது அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, தகுதியுள்ள பெண்கள் தங்களது ஆதார் எண்ணைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை ஆதார் அட்டை இல்லாதவர்கள் உடனடியாக அதற்குப் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம் என்றும், ஆதார் அட்டை வரும் வரை அதற்கான மாற்று ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம் என்றும் அரசாணையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.