» சினிமா » செய்திகள்

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்: முதல்வர் விஜய் இரங்கல்

வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 3:46:35 PM (IST)

sowkarJanakiCmvijay.jpg

சென்னையில் பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி (வயது 94) வெள்ளிக்கிழமை (ஆக. 21) காலமானார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் இதய நோய் பாதிப்புக்காக நடிகை செளகார் ஜானகி வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார். 

கடந்த 1950ஆம் ஆண்டு, ’ஷாவுகாரு’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமான செளகார் ஜானகி, 70 ஆண்டுகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். என்.டி. ராமா ராவ், சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன், ராஜ்குமார், நாகேஸ்வர ராவ் உள்ளிட்ட தென்னிந்திய ஜாம்பவான்களுக்கு ஜோடியாக செளகார் ஜானகி நடித்துள்ளார்.

புதிய பறவை (1964), நீர்க்குமிழி (1965), மகாகவி காளிதாஸ் (1966), எதிர் நீச்சல் (1968), இரு கொடுகள் (1969), உயர்ந்த மனிதன் (1968), காவிய ராவணம் (1970), தில்லு முல்லு (1981), வெற்றி விழா (1989), தேவி (1999), ஹே ராம் (2000) உள்ளிட்ட படங்கள் செளகார் ஜானகிக்கு புகழ் சேர்த்தன.

தமிழில் கடைசியாக, 2020ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான பிஸ்கோத் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் செளகார் ஜானகிக்கு 400-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் பத்ம ஸ்ரீ விருது, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது உள்பட பல்வேறு விருதுகளை செளகார் ஜானகி பெற்றுள்ளார்.

தமிழக முதல்வர் விஜய் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் இரங்கல் வெளியிட்டுள்ளார். முதல்வர் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், பழம்பெரும் திரைப்பட நடிகையும், தனது தனித்துவமான நடிப்பால் பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவருமான திருமதி சௌகார் ஜானகி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

திரைத்துறையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து, எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டிய அவரது கலைப்பணி என்றும் போற்றத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல்வேறு மொழிப் படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளதோடு, பத்மஸ்ரீ விருது, கலைமாமணி விருது, நந்தி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள திருமதி சௌகார் ஜானகி அவர்களின் மறைவு திரையுலகத்திற்கு பேரிழப்பாகும்.

திருமதி சௌகார் ஜானகி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடிகளில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory